பக்கம்-1
உலகில் எது முதலாவதாக தோன்றியிருக்கும் என்ற சிந்தனையுடன், ஆகாயத்தை வெறித்துப் பார்த்து கொண்டிருந்த அவனுக்கு நேரம் காலம் கடந்தது எல்லாம் தெரியவேயில்லை. "அடேய் கண்ணா, என்னடா மயக்கம் ஏதும் போட்டுட்டாயா" என அதிரும் குரலுடன் எழுப்பி விட்ட நண்பனின் குரலால் மீண்டு எழுந்தான் கண்ணன். அட மணி 09:00 ஆயிடுச்சா என விருட்டென்று எழுந்த அவனை நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் காவிரி ஆற்றின் குளிர்ந்த காற்றும் சலசலக்கும் நீரோட்டமும் "இன்னும் கொஞ்சநேரம் இருந்தா தான் என்ன" என பாடி அழைத்தது போல இருந்தது.
07:00 மணிக்கு வந்த நீ, ஒன்பது மணிக்கு கூட வீட்டுக்கு போகலைன்னா நல்லாவா இருக்கு என திட்டிய நண்பனை முறைத்துப் பார்த்தான் கண்ணன். "நீ என்ன பண்ணிட்டு இருந்த கணேசு" பதிலுக்கு பதிலாக திட்டப் பார்த்த கண்ணனை, "சீக்கிரமா போய் தூங்கு டா... நாளைக்கு அமாவாசை. வெயிலுக்கு முன்னாடி கொடுமுடிக்கு போகனும். நேரமானால் சைக்கிள் கடைல உள்ள சைக்கிள் எல்லாம் வாடகைக்கு எடுத்துடுவாங்க. அர்ஜுன் அண்ணா கடைகாரங்க கிட்ட ஐந்து சைக்கிள் வேணும் என சொல்லி வெச்சிருக்காராம்." என்றான் கணேஸ்.
இது மாசி மாதம் அமாவாசை. போன பௌர்ணமி தைபூசம். அதை அடுத்து கடந்த பத்து நாளாக தினமும் கொடுமுடி போவது பற்றியே திட்டமிட்டு வந்ததையும், அதற்காக வெள்ளிக் கிழமைகளில் அப்பா தந்த சந்தை காசுவை மிச்சம் பிடித்து வைத்ததையும் அசை போட்டுக்கொண்டு வீட்டுக்கு போய் சேர்ந்தான் கண்ணன்.
சாப்பிட்டு முடித்த பின் தூங்கும் முன்னர், மீண்டும் ஒருமுறை அதை எடுத்து பார்த்து விடலாம் என பெட்டியினை ஆர்வத்துடன் திறந்து பார்த்தான். திடீரென ஒரு அலரல் "அம்மா... அண்ணெ திரும்ப அந்த புத்தகத்தை எடுத்து படிக்க போறான்" இது கண்ணனின் தங்கை மஞ்சுவின் குரல். "ஆமாம் அம்மா அண்ணன் புக்கை எடுத்தார்" இது தம்பி மகேந்திரனின் சாட்சியம். "இல்லைங்க அம்மா" என்ற படி அமைதியாக அந்த புத்தகத்தை அங்கேயே வைத்து விட்டு உறங்கிப்போனான் கண்ணன்.
அந்த புத்தகம் தான் அவன் வாங்கிய முதல் நியூமராஜி புத்தகம் "எண்கணிதம்"
விலை ரூ 5.. (1995)
No comments:
Post a Comment