25 June 2024

9 - ஆரம்பம் ஆவது எண்ணாலே...

ரத்தின வேட்டை.

அன்று ஒரு அமாவாசை நாள். காலையில் சீக்கிரமே சிற்றுண்டி முடித்து விட்டு தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு, கிளம்ப தயாராகி விட்டான் கண்ணன். கணேசன், தாமோதர், குமார், செந்தில், ரமேஷ் என ஒரு கூட்டமாக கிளம்பி விட்டார்கள். அனைவரும் தனது வீட்டை தாண்டி தான் செல்ல வேண்டும் என்பதால், கண்ணன் தனது வீட்டின் முன்பிருந்து சாலையினை வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தான்.
2000 ம் ஆண்டு பிறந்து விட்டது. ஆனாலும் அப்போதும் கூட இவர்களின் ஊரில் மஞ்சள் பை கலாச்சாரம் போகவில்லை. அவரவார்களுக்கான உணவு நீர் ஆகியவைகள் அவர்களே கொண்டு வர வேண்டும் என பேசியிருந்தார்கள். அர்ஜுனன் அண்ணாவிடம் புகைப்பட காமிரா இருந்தது. அதற்கு ஒரு பிலிம் ரோல் வாங்கி ரெடியாக வைத்திருந்தார்கள். ரோட்டில் இருந்து நண்பர்களின் சிக்னல் கிடைக்கவே, உடனடியாக கண்ணன் கிளம்பினான்.
வழியில் ஒரு ஊரில் ஆலமரம் இருந்தது. அதன் அடியில் செதுக்கப் படாத வெள்ளை பாறையினை நிற்க வைத்து இருந்தார்கள். அது அசப்பில் விநாயகர் போலவே இருந்தது. அங்கே இறங்கி, ஒரே ஒரு வைரக்கல் கிடைத்து விட்டால் பெரிய பணக்காரன் ஆகிவிடலாம் என வேண்டிக் கொண்டு கிளம்பினார்கள்.
சுமாராக 7 கிமீ சென்று இருக்கலாம். செம்மண் பூமியாக இருந்த பாதை திடீரென, சரளை & கூலங்கற்கள் கொண்ட வெண்ணிற தன்மை கொண்ட பூமியாக மாறியது. இந்த நிலப்பரப்பின் மாற்றம் ஆச்சரியம் தந்தது. நெருங்கி விட்டோம் என்ற மகிழ்ச்சி அனைவரிடமும் தெரிந்தது.
"தாத்தா, இங்கே ரத்தினக்கல் எல்லாம் வெட்டி எடுப்பங்கலாமே அந்த இடம் எங்கே உள்ளது" என ஒரு மாடு மேய்க்கும் நபரிடம் வழி கேட்டு சாலையில் இடது பக்கம் உள்ள ஒரு வண்டி பாதையில் சைக்கிளை விட்டார்கள். உள்ளே மாடு மேய்த்த இன்னொருவர் "பசங்களா இத்தனை பேரு கும்பலா வந்திருக்கீங்க. கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்கப்பா. அங்கே குவாரி தொண்டுண பெரிய பள்ளம் இருக்கு" என ஜாக்கிரதை கூறி விட்டு சென்றார்.
மணி 10க்கு மேல் இருக்கும். யாரிடமும் கடிகாரம் இல்லை. (அப்போது மொபைல் என ஒன்று உள்ளதே இவர்களுக்கு தெரியாது.) சைக்கிளை ஒரு வெப்ப மரத்தடியில் நிறுத்தி விட்டு ரத்தின வேட்டையில் இறங்கலாம் என முடிவு செய்தனர்.
போன உடனேயே, பெரிய ரத்தினங்கள் குவிந்து கிடக்கும் அள்ளிக் கொண்டு வரலாம் எனும் எண்ணத்தில் கல் (மண்) விழுந்தது. அங்கே உள்ள அனைத்து பாறைகளும் மின்னின. கற்களும் ஜொலித்தது. ஆனால் அது தரமான ராசிக் கற்கள் அல்ல.
திடீர் என தாமோதர் கத்தி கூச்சல் போடவே அனைவரும் சத்தம் வந்த திசையினை நோக்கி ஓடினார்கள்.
தொடரும்...

No comments:

Post a Comment