24 June 2024

4 - ஆரம்பம் ஆவது எண்ணாலே...

காலை 7 மணி. பொழுது புலர்ந்தது கூட தெரியாமல் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் கண்ணன். எனக்கு டீ குடுத்தா தான் எழுந்திருப்பேன் என பத்து வயதிருக்கும் தம்பி மகேந்திரன் ரகளை செய்து கொண்டிருந்த சத்தம் கேட்டு எழுந்து வந்த கண்ணன் அம்மாவிடம் "கோயிலுக்கு போறோம்ல அம்மா... எழுப்பி விட்டு இருக்கலாம்னு..." என்றான்.

"வெகுநேரமா கழுதையா கத்திட்டு தாண்டா இருந்தேன். இங்க பாரு சின்னவன் எழுந்துடான். ஆனா நீ இப்பதான் வர்ர. வயசுதான் பதினாறு தாண்டுது. சட்டு புட்டு எழுந்து வேலைய பாத்தா தானே ஆவும். இதுவே மார்கழி மாசம் னா மட்டும் நால்ரைக்கே எழுந்துடுவே. இப்ப மட்டும் நான் எழுப்புனுமா" என்றாள் அம்மா.
வேறேதும் யோசிக்காமல் வேகவேகமாக ரெடியாகி ஏற்கனவே திட்டமிட்டபடி சரியாக 07:30 மணிக்கு வாடகை சைக்கிள் எடுத்துக் கொண்டு கண்ணனும் அவனது நண்பர்களான கணேசன் அர்ஜுனன் தாமோதர் குமார் ஆகியோரும் காவிரி ஆற்றங்கரைக்கு கிளம்பினார்கள்.
காவிரி ஆற்றினை கடக்க பரிசல் ஏறிதான் தாண்ட வேண்டும். சைக்கில்களை எல்லாம் தூக்கி போட்டுக்கொண்டு அதன் சந்துகளில் இவர்களையும் ஏற்றிக்கொண்டு பரிசல் கிளம்பியது. பரிசல் தள்ளுபவர் அந்த சிறுவர்களிடம் "கூட்டமா கிளம்பிடீங்க போல" என்றார். "ஆமாம் பாலுண்ணா. இன்னிக்கு அமாவாசை. தறிகாரங்களுக்கு இன்னிக்கு மட்டும் தானே விடுமுறை. அதான் கொடுமுடி கோயிலுக்கு போறோம்." என் அர்ஜுனன் கூறினான்.
சரிதான் தம்பி. இந்த ஜோதிடர் ஊருக்கு புதுசு போல... அந்தாண்ட கருவேலம்பாளையம் பஸ் ஸ்டாப்ல இவரை விட்டுவிட்டு போங்க என கூறிய பாலு அண்ணா ஒரு வயதான நபரை (வழக்கம்போல ஜோதிடர்னாவே வயசானவங்க தான் போல...) இவர்களின் கூட அனுப்பினார். இவர்கள் அமைதியாகவே அவருடன் நடந்து வந்தனர்.
பரிசலில் இருந்து இறங்கி ஒரு கிலோமீட்டர் மணலில் சைக்கிளை தள்ளிக்கொண்டு தான் போகனும். அந்த இடைவெளியில் "தம்பிகளா உங்க வயசு பசங்க லீவு விட்டா சினிமா பார்க்கு என போவாங்க. நீங்கள்லாம் கோவிலுக்கு அதுவும் ஆற்றை கடந்து 10 கிமீ போறீங்க. ரொம்ப சந்தோசம் யா." என பாராட்டிக் கொண்டே வந்தார் அந்த ஜோதிடர்.
கொஞ்ச தூரத்தில் எதிரே ஒரு மோட்டார் பைக் வந்தது. 1995 ல் மோட்டார் பைக் லாம் அதிசயமான வஸ்து என்பதால் அனைவரும் ஆ..கா.. என பார்த்தனர். வண்டியில் வந்தவர் அருகில் வந்ததும் இறக்கி அந்த ஜோதிடரை வணங்கி மரியாதையுடன் அவரின் பையை வாங்கி வண்டியின் முன்னால் வைத்துக் கொண்டு, (மூன்று கிமீ தாண்டி உள்ள) ஊஞ்சலூர் வரை கொண்டு விடுகிறேன் ஐயா என அந்த ஜோதிடரை அழைத்து சென்று விட்டார். (ஊஞ்சலூரில் எல்லா பேருந்தும் நிற்கும். கருவேலம் பாளையத்தில் டவுன் பஸ் மட்டும் நிற்கும்)
இதனை பார்த்த கண்ணனுக்கு மனதில் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் பற்றியது. இதேபோல் இவன் கைத்தறி பழக்கிய (பனிரெண்டு வயதில்) ஆறுமுக சித்தப்பாவை பார்க்க பலர் வருவதும்... தேங்காய் பழம் பூ வைத்து குரு தட்சணை என கூறி ஆசி பெறுவதுண்டு. அப்ப ஜோதிடர்னா கெத்து. எல்லா ஜோதிடரும் கெத்து தான் போல என கண்ணன் சிலாகித்து கொண்டான்.
இந்த சம்பவம் கண்ணனை விரைவில் ஜோதிடர் ஆக்கும் என அவனே நினைக்கவில்லை.
காலை 09:00 மணிக்குள் கொடுமுடி நகருக்குள் ஐவரும் நுழைந்து விட்டார்கள். சைக்கிள்களை ஸ்டேண்டில் நிறுத்தி பாஸ் வாங்கினார்கள். அந்த டிக்கெட் எண் என்னவென கணேசன் பார்த்தான். "கண்ணா, இந்த டிக்கெட் எண் நான்கு என வருகிறது. என்ன ஆகும் டா..." "நாம் வாங்கவந்த புக்க வாங்க மாட்டமா தெரியலையே" எனும் படி கோயிலுக்குள் நுழைந்து அம்மன் கோவில் பிரகாரம் உள்ள பக்கம் எட்டிப்பார்த்தான் கண்ணன். நல்ல வேளையாக புத்தக கடை இருந்தது.
அப்ப அந்த நான்காம் எண் கொண்ட டிக்கெட் என்ன பலனை தரும். அந்த கடை இருக்கே. எனும் சந்தேகத்தோடு மகுடேஸ்வரர் விஷ்ணு பிரம்மா என மும்மூர்த்திகளை ஐவரும் முதலில் தரிசனம் செய்தார்கள்.
தொடரும்....

No comments:

Post a Comment