பக்கம்-2
உறக்கத்தில் இருந்த கண்ணனின் நினைவுகள் அடுத்த நாள் கொடுமுடிக்கு செல்வதிலேயே இருந்தால் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டு இருந்தான். அந்த எண்கணித புத்தகம் வாங்கிய நினைவுகள் ஓடிக்கொண்டு இருந்தது.
அன்று மட்டும் அது நடக்காமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும் என எப்போதும் அவன் நினைத்துக்கொண்டு இருப்பான். அன்று கபிலர் மலை முருகனுக்கான தை பூசத் தேர் திருவிழாவின் அடுத்த நாள். அருகில் உள்ள ஊர்களில் இருந்து அனைவரும் கடைவீதி சுற்றி பார்க்க கிளம்பி சாரிசாரியாக சுற்றிக் கொண்டு இருந்தார்கள்.
அந்த காலகட்டத்தில் இந்த ஒரு நாளுக்காக சிறுவர்கள் வருடம் முழுதும் கனவு கண்டு காத்திருப்பார்கள். திருவிழாவில் மட்டும்தான் புத்தக கடை போடுவார்கள். அதில் பல்வேறு புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். திரைப்பட பாட்டு புத்தகமும் இருக்கும். அந்த ஆண்டில் வெளியான சூப்பர் ஹிட் படங்களான, காதலன் டூயட் மேமாதம் போன்ற படங்களின் பாடல்கள் உள்ள ஹிட் திரைப் பாடல்கள் புத்தகத்தை வாங்க கண்ணன் ஆர்வமுடன் போயிருந்தான்.
கடையின் முன் நண்பர்கள் உறவினர்கள் என நின்று புத்தகங்களை எடுத்து புரட்டி கொண்டு இருந்த போது... 1994-95 ஹிட்ஸ் எனும் புத்தகத்தை கண்ணன் ஆர்வமுடன் எடுத்து பார்த்தான். விலை ரூ 4.50 என இருந்தது. பற்கள் 28 ம் தெரிந்தது அவனுக்கு.
வாங்கிடலாம் என கல்லாவிற்கு நகரும் போது... "ஏன்டா நாலு கழுதை வயசு ஆவுது. சினிமா பாட்டு புக் வாங்குரியே... உருப்படுவியா நீ. ஏதாவது படிப்புக்கு உதவுறா மாதிரி ஏதாவது புக்கு வாங்க மாட்டே." இது அருகில் இருந்த ஏதோ ஒரு சிறுவனின் பெற்றோர் அவனை திட்டிய வார்த்தைகள்.
இவனுக்கும் ஏதோ உறுத்தியது. சரி என பாடல் புக் வேண்டாம். தம்பிக்கு வாய்ப்பாடு கணித புக் வாங்கி தரலாம் என முடிவெடுத்தான். சட்டென கண்ணில் பட்ட எண்கள் அரிச்சுவடி எனும் புத்தகத்தை வாங்கி கொண்டு பையில் போட்டுக் கொண்டான். நண்பர்களுடன் தேர்வீதி சுற்றிவிட்டு இரவு வீடு வந்து சேர்ந்தான்.
அடுத்த நாள் காலையில், கைத்தறியில் நெசவு வேலையில் இருந்த கண்ணனின் அப்பா "இன்று தான் தம்பியின் மீது அக்கரை வந்ததா" என விசாரித்துக் கொண்டே அந்த புத்தகத்தை விரித்து படித்தார். "கண்ணன் னு பேர்ல தான் இருக்கு. மண்டைல இருக்காப்டி தெரியலை. அரிச்சுவடி வாங்குனேன்னு சொல்லி, எண்கணிதம் அடிப்படை புக்க வாங்கிட்டு வந்து இருக்க." என்றார்.
அட... என்றபடி எண்கணித புத்தகத்தை வாசித்தான் கண்ணன். ஜோதிடம் பஞ்சாங்கம் கணிதம் என தாத்தாவின் மூலம் சில விசயங்களை கேள்விப்பட்ட அவனுக்கு எண்கணிதம் என்பது முற்றிலும் புதுமையாகவே இருந்தது.
நெசவு வேலையில் மனம் செல்லா நிலையில்... எண்கணிதம் புத்தகத்தில் இருந்து அதிசயங்களை பற்றி சொல்லியே தீர்வதென மாலை 06:00 மணிக்கு காவிரிக் கரையில் நண்பர்களை சந்திக்க ஆவலுடன் கிளம்பினான் கண்ணன்.
தொடரும்....
No comments:
Post a Comment