25 June 2024

8 - ஆரம்பம் ஆவது எண்ணாலே...

பக்கத்து வீட்டில் இருந்த தனது சித்தப்பா தந்த அய்யூப் அவர்களின் ராசிக்கல் பற்றிய புத்தகத்தை மீண்டும் மீண்டும் ஆழ்ந்து படித்ததன் மூலமாக ராசிக்கல் பற்றிய புரிதல் அதிகரித்துக் கொண்டே போனது கண்ணனுக்கு...

ஜோதிடர் லிங்கம் அவர்களின் சகோதரர் பாமாண்டம்பாளையம் பகுதில் உள்ள ஆடுமாடு மேய்ப்பர்கள் பொறுக்கி எடுத்து வரும் வண்ண வண்ண கற்களை வாங்குவார்கள். அது ரத்தினங்களா கண்ணாடியா என சோதிப்பார்கள். கல்லில் மஞ்சள் நீரினை விட்டு அதில் ரத்தினத்தை தேய்த்து பார்க்க வேண்டும். அப்போது அது சிவக்காமல் அப்படியே இருப்பது ரத்தினத்தின் குணமாக உள்ளதாக கூறுவர். சுண்ணாம்பு சத்துவம் அதிகமுள்ள கற்கள் பட்டை தீட்ட முடியாது என்பதால் வாங்க மாட்டார்கள்.
கண்ணனுக்கு தனது 21 + வயதுகளில் ராசிக்கற்களின் மீதான மோகம் மிக அதிகரித்தது. அங்கேயுள்ள கிராமவாசிகள் எப்படி கற்களை தேடுகிறார்கள் என்பது பற்றி சில கதைகள் உள்ளது.
(அதற்கு முன்னர் பாமாண்டம்பாளையம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியமாகும். இது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பரமத்தி-வேலூர் ன் இடைப்பட்ட நிலப்பகுதியாகும். 2010 ம் ஆண்டில் மத்திய அரசால் பிளாட்டினம் உள்ளதா என ஆராய பெரிய அளவில் குழு வந்தது. அதற்கும் மேலாக சந்திராயன் பரிசோதனைக்காக சந்திரனை ஒத்த மண் இங்கிருந்தே எடுக்கப்பட்டது. இந்த பகுதி முழுக்கவே உலகத்தரமான சந்திரகாந்தகல் கிடைக்கும். இது பற்றியெல்லாம் கண்ணனுக்கு அப்போது தெரியாது.)
1990 க்கு முன்பு வரை பாமாண்டம்பாளையம் சுற்றியுள்ள கிராம மக்கள் அந்த ஊரில் அஸ்திவாரம் ஏதுமற்ற 10-15 அடி நீள அகலமுள்ள ஓலை குடில்களை அமைத்துக்கொண்டு வாழ்வார்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த குடிலின் உள்ளேயுள்ள மண்ணை ஐந்தடி வரைக்கும் தோண்டி சலிப்பார்கள். அப்போது அதிலிருந்து கிடைக்கும் வண்ண கற்களை எடுத்து வைத்துக்கொண்டு விடுவார்கள். பின்னர் குடிசையினை தள்ளி வைத்துக்கொண்டு இன்னும் ஒரு குழியினை தோண்டி சலித்த மண்ணை முன்பு தோண்டிய குழியினை நிரப்புவார்கள்.
மேற்கண்ட படி கிடைத்த கற்களை கரூர் ல் ரத்தினங்களுக்கான வார சந்தையில் விற்று விடுவார்கள். இந்தியாவெங்கும் இருந்து பல வியாபாரிகள் இங்கு வந்து ரத்தினங்கள் வாங்குவதுண்டு. 1990 + வரை கூட கரூரில் குறிப்பிட்ட ஒரு வீதியில் பொறுக்கி எடுத்த கற்களை சிறுசிறு குவியலாக வைத்து விற்பனை செய்வார்கள். இப்போது வீதியில் விற்பதில்லை. ஜோதிடர்களிடம் அல்லது ரத்தின வியாபாரிகளிடம் நேரடியாக விற்று விடுகிறார்கள்.
கண்ணனும் கணேசனும் இதுபற்றி நிறைய பேசி வந்தார்கள். சரி ஒரு நாள் நாமும் பாமாண்டம்பாளையம் சென்று பார்த்து விடலாம் என முடிவெடுத்தார்கள். இந்த காலகட்டத்தில் கற்களின் தரம் வண்ணம் கடினத்தன்மை விலை நிர்ணயம் பற்றிய பல்வேறு நுணுக்கங்களை கண்ணன் கற்றுக்கொள்ள வசதியாக இருந்தது.
ரத்தின வேட்டைக்கான பாமாண்டம்பாளையம் பயணம் மிகவும் அற்புதமான அனுபவத்தை தந்தது.
தொடரும்...

No comments:

Post a Comment