26 December 2015

பரிகாரங்கள் பலிக்க வேண்டுமா?

     ஆன்மீக பரிகாரம் என்பது ஒரு குறிப்பிட்ட கிரகம் அல்லது தேவதையின் சக்தியினை ஆசிர்வாதத்தினை முறைபடுத்தி நமக்கு கிடைக்க வழி செய்வதாகும். ஆன்மீக பரிகாரங்களை நம்பிக்கையுடன் முழுமையாக செய்ய வேண்டும். பரிகாரம் செய்யும் அன்பர்கள் ஒரு விஷயத்தை மனதில் ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டும்.

 பரிகாரம் என்பது நல்ல மழை பெய்யும் நேரத்தில் கையில் ஒரு குடையுடன் பாதுகாப்பாக செல்வதற்கு ஒப்பானது. குடை வைத்திருந்தால் மழையே பெய்யாது என்பது எப்படி சாத்தியம் இல்லையோ, அது போல பரிகாரம் செய்தால் நமது கர்ம வினை பதிவுகள் நடக்காமல் போகும் என்பதும் சாத்தியம் இல்லை. நமக்கு கிடைக்கும் துன்பங்கள், நமது கர்ம வினைக்கு ஏற்ப, இந்த ஜென்மத்தில் திரும்பக் கிடைக்கும். பரிகாரங்கள் அதன் தாக்கத்தை, கடுமையை ஓரளவுக்கு குறைக்கச் செய்யும்.
காலம் முழுக்க அநியாயங்கள் செய்துவிட்டு, பரிகாரம் செய்தால் மட்டும் போதுமா!? பரிகாரம் செய்ய கோவில்களுக்கு செல்லுவதனை, இன்று ஏதோ ஒரு பிக்னிக் போவதுபோல், கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் சென்று வந்து விடுகிறார்கள். அதனால் பலன்கள் உண்டாகுமா? என்றால் உண்டாகும். நெருப்பினை தெரிந்து தொட்டாலும், தெரியாமல் தொட்டாலும் சுடத்தான் செய்யும். ஆனால் அதன் பலன் நமக்கு பயன்படாமல் போகும் வாய்ப்பு உண்டு.

 பரிகாரம், ஹோமம் , யாகம், அன்னதானம் ஆகியவை அந்த தேவதையின் முழு ஆசிர்வாதம் கிடைக்கச் செய்யப்படுவது. பரிகாரம் செய்ய விரும்பும் அன்பர்கள் அங்கு சென்று கூடிய மட்டும் இறைவனுக்கு பரிகாரம் செய்யும்போது மெய் வருத்தி இறைவனோடு ஒன்றி மனமுருகி செய்ய வேண்டும். ஏதோ கடமைக்கு செய்ய கூடாது. எளியோர்களின் அன்னதானத்திற்கோ அல்லது முதியோர் இல்லத்திற்கோ பயனுள்ள வழியில் செலவு செய்யுங்கள். அவர்களின் வயிறு குளிர குளிர, நமது பிரச்சினைகள் தீர்ந்து மன அமைதியுடன் வாழலாம்.

நாம், எந்த பரிகாரம் செய்ய விரும்பினாலும், பரிகாரம் செய்ய விருக்கும் தினத்திற்கு முன், குறைந்தது ஒரு மண்டலத்திற்கு (48 நாட்கள்) விரதமிருந்து, உடலையும், மனதையும் சுத்தமாக வைத்து, இரு வேளை நீராடி, அந்த தெய்வத்தை மனமுருக வேண்டி பின் பொருத்தமான நாளில் அந்த ஸ்தலத்துக்கு சென்று இறைவனை மனமார தொழுது, குறிப்பட்ட தொல்லைகளில் இருந்து விடுவிக்க வேண்டி, பரிகார யாகங்கள் செய்து வழிபடவேண்டும். அந்த கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம், அர்ச்சனை, வாய்ப்பு இருந்ததால் அங்க பிரதஷ்ணம் செய்வது ஆகியவை இன்னும் நல்லது. ஆரோக்கியம் குறைந்தவர்கள், மேற்படி முறையில் விரதம் இருக்க இயலாதவர்கள், அந்த குறிப்பிட்ட நாட்கள் முடிந்தவரை நாம ஜபம் செய்ய வேண்டும். பரிகார பலன்களை முழுமையாக அனுபவிக்க வேண்டுமாயின், பரிகாரம் செய்து முடித்த பிறகும் நம் மனதை உறுத்தும் தவறுகளை மீண்டும் செய்யாமல், செய்யும் தவறுகள் பிறருக்கு தெரியாமல் இருந்தால் கூட, சுயக் கட்டுப்பாட்டுடன் இருத்தல் அவசியம். அது உங்களுக்கும் உங்கள் சந்ததியினருக்கு நல்லது.

இதைத் தவிர தங்கள் இஷ்ட தெய்வத்தை நித்ய வழிபாடு செய்வதைவழக்கமாக வைத்திருங்கள். முடிந்தவரை தினமும் காலையிலோ அல்லது மாலையிலோ பழமையான கோயில் அருகில் இருந்தால் சென்றுவருவது நலம் பயக்கும்.சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் வாரம் ஒருமுறையேனும் சென்று இறைவனை தரிசித்தல் ஆன்ம பலத்தினை பெறுக்கும்.எனவே, பரிகாரம் செய்யும் அன்பர்கள், முழு நம்பிக்கையுடன் மேலே கூறியபடி நன்முறைகளை பின்பற்றி கடைபிடித்து வருவார்களேயானால், அவர்கள் வாழ்வில் நல்லதொரு மாற்றம் கண்டிப்பாக நிகழும்.


No comments:

Post a Comment