25 June 2024

சிம்ம லக்னம்

 உங்கள் லக்னம் சிம்மம். 

சூரியன் உங்கள் லக்னாதிபதி. 

உங்கள் ஜாதகத்தின் சுபகாரக கிரஹம். 

கேந்திரத்திற்கும். திரிகோணத்திற்கும் அதிபதியான அங்காரகன் உங்களுடைய பரம யோக காரகன். 

சிம்ம லக்னத்தில் பிறந்த நீங்கள் பருமனாக இல்லாவிட்டாலும், நல்ல முக அமைப்பும் தைரியமும் ஆர்வமும் லட்சியமும் உடையவர்களாக இருப்பீர்கள். 

எண்ணத்திலும் செயலிலும் ஒரு விதகர்வமும். எப்படியாவது வெற்றியாளர் ஆகவேண்டும் எனும் வேகமும் இருக்கும். 

கடக லக்னம்

 உங்கள் லக்னம் கடகம். 

லக்னாதிபதி சந்திரன் சுபகாரகன். 

கேந்திரத்திற்கும் திரிகோணத்திற்கும் ஆதிபத்யம் பெற்றுள்ள அங்காரகன் உங்களுடைய மிகச் சிறந்த யோக காரகன். 

கடகத்தில் பிறந்த நீங்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். 

இனிமையானவர்கள். 

பாசம் மிக்கவர்கள். 

அன்பான சுபாவமுடையவர்கள். 

சிறந்த புத்திசாலிகள் கற்பனை வளம் மிக்கவர்கள்.

மிதுன லக்னம்

 உங்களுடைய லக்னம் மிதுனம். 

லக்னாதிபதி புதன் தான் உங்களுக்கு மிகச்சிறந்த யோக காரகனாவான். 

மிதுனத்தில் பிறந்த காரணத்தால் இருவித மாறுபட்ட குணங்களையுடைய நீங்கள் பொதுவாக இனிமையான சுபாவமும். பண்பான திறைவும் கொண்டவர்கள். 

மிகச் சிறந்த புத்திசாலியான நீங்கள் வெகு விரைவில் நல்லது கெட்டதைக் கண்டறிந்த சரியாகப் புரிந்து கொள்வீர்கள். 

உங்களுடைய முற்போக்கான செயல்களால் புகழ் பெறுவீர். 

ரிஷப லக்னம்

 ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சுக்கிரன் அவன் தான் யோக காரகன். 

அதோடு கேந்திரத்திற்கு திரிகோணத்திற்கும் அதிபதியான சனிபகவானும் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கும் யோக காரகனாவான். 

சுக்கிரனின் ஆதிக்கத்தில் ரிஷபத்தில் பிறந்த நீங்கள் சுபாவத்தில் கபடமற்றவர்கள். 

இனிய பேச்சும். மென்மையான சுபாவமும். அமைதியான போக்கும் உடையவர்கள்.

மேஷ லக்னம்

 உங்களுடைய லக்னம் மேஷம். 

லக்னாதிபதி செவ்வாய் உங்கள் ஜாதகத்திற்கு மிகச் சிறந்த யோக காரகனாவான். 

மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் சாதாரணமாகவே சிறிது கர்வமும் அகம்பாவமும் உடையவர்கள். 

அங்காரகன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் கொஞ்சம் சூடானவர்கள். 

சுய சுதந்திரத்தை அதிகமாகவே விரும்புவர்கள். 

மிகவும் சுறு சுறுப்பாக இயங்குபவர்கள். 

எதையாவது சாதிக்க விரும்புவர்கள். 

9 - ஆரம்பம் ஆவது எண்ணாலே...

ரத்தின வேட்டை.

அன்று ஒரு அமாவாசை நாள். காலையில் சீக்கிரமே சிற்றுண்டி முடித்து விட்டு தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு, கிளம்ப தயாராகி விட்டான் கண்ணன். கணேசன், தாமோதர், குமார், செந்தில், ரமேஷ் என ஒரு கூட்டமாக கிளம்பி விட்டார்கள். அனைவரும் தனது வீட்டை தாண்டி தான் செல்ல வேண்டும் என்பதால், கண்ணன் தனது வீட்டின் முன்பிருந்து சாலையினை வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தான்.
2000 ம் ஆண்டு பிறந்து விட்டது. ஆனாலும் அப்போதும் கூட இவர்களின் ஊரில் மஞ்சள் பை கலாச்சாரம் போகவில்லை. அவரவார்களுக்கான உணவு நீர் ஆகியவைகள் அவர்களே கொண்டு வர வேண்டும் என பேசியிருந்தார்கள். அர்ஜுனன் அண்ணாவிடம் புகைப்பட காமிரா இருந்தது. அதற்கு ஒரு பிலிம் ரோல் வாங்கி ரெடியாக வைத்திருந்தார்கள். ரோட்டில் இருந்து நண்பர்களின் சிக்னல் கிடைக்கவே, உடனடியாக கண்ணன் கிளம்பினான்.
வழியில் ஒரு ஊரில் ஆலமரம் இருந்தது. அதன் அடியில் செதுக்கப் படாத வெள்ளை பாறையினை நிற்க வைத்து இருந்தார்கள். அது அசப்பில் விநாயகர் போலவே இருந்தது. அங்கே இறங்கி, ஒரே ஒரு வைரக்கல் கிடைத்து விட்டால் பெரிய பணக்காரன் ஆகிவிடலாம் என வேண்டிக் கொண்டு கிளம்பினார்கள்.
சுமாராக 7 கிமீ சென்று இருக்கலாம். செம்மண் பூமியாக இருந்த பாதை திடீரென, சரளை & கூலங்கற்கள் கொண்ட வெண்ணிற தன்மை கொண்ட பூமியாக மாறியது. இந்த நிலப்பரப்பின் மாற்றம் ஆச்சரியம் தந்தது. நெருங்கி விட்டோம் என்ற மகிழ்ச்சி அனைவரிடமும் தெரிந்தது.
"தாத்தா, இங்கே ரத்தினக்கல் எல்லாம் வெட்டி எடுப்பங்கலாமே அந்த இடம் எங்கே உள்ளது" என ஒரு மாடு மேய்க்கும் நபரிடம் வழி கேட்டு சாலையில் இடது பக்கம் உள்ள ஒரு வண்டி பாதையில் சைக்கிளை விட்டார்கள். உள்ளே மாடு மேய்த்த இன்னொருவர் "பசங்களா இத்தனை பேரு கும்பலா வந்திருக்கீங்க. கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்கப்பா. அங்கே குவாரி தொண்டுண பெரிய பள்ளம் இருக்கு" என ஜாக்கிரதை கூறி விட்டு சென்றார்.
மணி 10க்கு மேல் இருக்கும். யாரிடமும் கடிகாரம் இல்லை. (அப்போது மொபைல் என ஒன்று உள்ளதே இவர்களுக்கு தெரியாது.) சைக்கிளை ஒரு வெப்ப மரத்தடியில் நிறுத்தி விட்டு ரத்தின வேட்டையில் இறங்கலாம் என முடிவு செய்தனர்.
போன உடனேயே, பெரிய ரத்தினங்கள் குவிந்து கிடக்கும் அள்ளிக் கொண்டு வரலாம் எனும் எண்ணத்தில் கல் (மண்) விழுந்தது. அங்கே உள்ள அனைத்து பாறைகளும் மின்னின. கற்களும் ஜொலித்தது. ஆனால் அது தரமான ராசிக் கற்கள் அல்ல.
திடீர் என தாமோதர் கத்தி கூச்சல் போடவே அனைவரும் சத்தம் வந்த திசையினை நோக்கி ஓடினார்கள்.
தொடரும்...

8 - ஆரம்பம் ஆவது எண்ணாலே...

பக்கத்து வீட்டில் இருந்த தனது சித்தப்பா தந்த அய்யூப் அவர்களின் ராசிக்கல் பற்றிய புத்தகத்தை மீண்டும் மீண்டும் ஆழ்ந்து படித்ததன் மூலமாக ராசிக்கல் பற்றிய புரிதல் அதிகரித்துக் கொண்டே போனது கண்ணனுக்கு...

ஜோதிடர் லிங்கம் அவர்களின் சகோதரர் பாமாண்டம்பாளையம் பகுதில் உள்ள ஆடுமாடு மேய்ப்பர்கள் பொறுக்கி எடுத்து வரும் வண்ண வண்ண கற்களை வாங்குவார்கள். அது ரத்தினங்களா கண்ணாடியா என சோதிப்பார்கள். கல்லில் மஞ்சள் நீரினை விட்டு அதில் ரத்தினத்தை தேய்த்து பார்க்க வேண்டும். அப்போது அது சிவக்காமல் அப்படியே இருப்பது ரத்தினத்தின் குணமாக உள்ளதாக கூறுவர். சுண்ணாம்பு சத்துவம் அதிகமுள்ள கற்கள் பட்டை தீட்ட முடியாது என்பதால் வாங்க மாட்டார்கள்.
கண்ணனுக்கு தனது 21 + வயதுகளில் ராசிக்கற்களின் மீதான மோகம் மிக அதிகரித்தது. அங்கேயுள்ள கிராமவாசிகள் எப்படி கற்களை தேடுகிறார்கள் என்பது பற்றி சில கதைகள் உள்ளது.
(அதற்கு முன்னர் பாமாண்டம்பாளையம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியமாகும். இது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பரமத்தி-வேலூர் ன் இடைப்பட்ட நிலப்பகுதியாகும். 2010 ம் ஆண்டில் மத்திய அரசால் பிளாட்டினம் உள்ளதா என ஆராய பெரிய அளவில் குழு வந்தது. அதற்கும் மேலாக சந்திராயன் பரிசோதனைக்காக சந்திரனை ஒத்த மண் இங்கிருந்தே எடுக்கப்பட்டது. இந்த பகுதி முழுக்கவே உலகத்தரமான சந்திரகாந்தகல் கிடைக்கும். இது பற்றியெல்லாம் கண்ணனுக்கு அப்போது தெரியாது.)
1990 க்கு முன்பு வரை பாமாண்டம்பாளையம் சுற்றியுள்ள கிராம மக்கள் அந்த ஊரில் அஸ்திவாரம் ஏதுமற்ற 10-15 அடி நீள அகலமுள்ள ஓலை குடில்களை அமைத்துக்கொண்டு வாழ்வார்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த குடிலின் உள்ளேயுள்ள மண்ணை ஐந்தடி வரைக்கும் தோண்டி சலிப்பார்கள். அப்போது அதிலிருந்து கிடைக்கும் வண்ண கற்களை எடுத்து வைத்துக்கொண்டு விடுவார்கள். பின்னர் குடிசையினை தள்ளி வைத்துக்கொண்டு இன்னும் ஒரு குழியினை தோண்டி சலித்த மண்ணை முன்பு தோண்டிய குழியினை நிரப்புவார்கள்.
மேற்கண்ட படி கிடைத்த கற்களை கரூர் ல் ரத்தினங்களுக்கான வார சந்தையில் விற்று விடுவார்கள். இந்தியாவெங்கும் இருந்து பல வியாபாரிகள் இங்கு வந்து ரத்தினங்கள் வாங்குவதுண்டு. 1990 + வரை கூட கரூரில் குறிப்பிட்ட ஒரு வீதியில் பொறுக்கி எடுத்த கற்களை சிறுசிறு குவியலாக வைத்து விற்பனை செய்வார்கள். இப்போது வீதியில் விற்பதில்லை. ஜோதிடர்களிடம் அல்லது ரத்தின வியாபாரிகளிடம் நேரடியாக விற்று விடுகிறார்கள்.
கண்ணனும் கணேசனும் இதுபற்றி நிறைய பேசி வந்தார்கள். சரி ஒரு நாள் நாமும் பாமாண்டம்பாளையம் சென்று பார்த்து விடலாம் என முடிவெடுத்தார்கள். இந்த காலகட்டத்தில் கற்களின் தரம் வண்ணம் கடினத்தன்மை விலை நிர்ணயம் பற்றிய பல்வேறு நுணுக்கங்களை கண்ணன் கற்றுக்கொள்ள வசதியாக இருந்தது.
ரத்தின வேட்டைக்கான பாமாண்டம்பாளையம் பயணம் மிகவும் அற்புதமான அனுபவத்தை தந்தது.
தொடரும்...

7 - ஆரம்பம் ஆவது எண்ணாலே...

கண்ணன் கூறியபடி நடக்காமல் போனது. உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்தியா வெளியேறி விட்டது. அதன்பின்னர் தான் ஒரு உண்மை புரிந்தது. கேள்வி வாக்கியத்தை வைத்து பிரமிடு கணக்கு செய்வது சரிவராது. அதே கேள்வியின் ஒரு வார்த்தை மாறினாலும் கூட கணக்கு மாறி விடுகிறது என்பதை அதன் பின்னர் தான் கவனித்தான். அதன் பின்னர் 1996 ன் இறுதி மாதங்கள் வரை மீண்டும் மீண்டும் பல்வேறு பெயர்களை நியூமராலஜி படி ஆராய்ந்து வந்த கண்ணன் ஏதோ புரிந்தது போல உணர்ந்தான். பெயருக்கும் அதன் பிரமிடு எண்ணுக்குமான தொடர்பை உணரமுடிந்தது.

இந்த கணக்குகளை போடுவதற்கு நிறைய நோட்டுகள் தேவைப்பட்டது. இது பெரிய செலவாக பட்டது அவனுக்கு. இதனால் கண்ணனின் கைத்தறி தொழில் பெரிய அளவில் வருமானம் இழப்பு உண்டானது. இருந்தாலும் கூட எண்கணிதம் மீது இருந்த ஆர்வம் குறையவில்லை.
இதன் இடையே ஜோதிடம் சார்ந்த பல்வேறு தகவல்களை படிக்க தொடங்கினான். கண்ணனின் பொருளாதாரம் புத்தகங்களை விலை கொடுத்து வாங்க அனுமதிக்காத அந்த காலகட்டத்தில், அவனின் தாத்தா வாங்கி வைத்திருந்த சில அற்புதமான ஜோதிட புத்தகங்கள் இவனுக்கு உதவியது. இதில் முக்கியமானது குடும்ப ஜோதிடம் "தி லிட்டில் பிளவர் கம்பெனி" வெளியீட்டில் வந்த (முதல் பதிப்பு) புத்தகம் இவனுடைய தாத்தாவிடம் இருந்தது.
அந்த ஒரு புத்தகத்தையே மீண்டும் மீண்டும் படிப்பதும் அதில் உள்ள ஜாதகம் கணிக்கும் கணிதத்தை பல்வேறு தேதிகளை வைத்து போடுவதும் என கண்ணனின் ஜோதிட பயணம் தொடர்ந்தது.
ஆண்டுகள் சில கடந்தன இது 1999. 2000 ஆண்டு திறக்க உள்ளதை கொண்டாடும் வகையில் உள்ளூரில் உள்ள சிறுவர்கள் இளைஞர்கள் இணைந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தனர். கண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து மேஜிக் ஷோ ஒன்றை ஏற்பாடு செய்தனர். இதில் மேஜிக் நிபுணராக பிளேடுகளை விழுங்கி அதை சரமாக எடுப்பது போன்ற அபாயகரமான பல்வேறு மேஜிக் கலை செய்து அசத்தினான் கண்ணன். இதனால் ஊருக்குள் தனது 20வது வயதிலேயே நல்ல அறிமுகம் கிடைத்தது.
அந்த காலகட்டத்தில் அறிமுகமான அற்புதமான நண்பன் முருகன். மூன்று ஆண்டுகளாக நின்று விட்டிருந்த எண்ணியல் கலையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவிய எண்கணித ஜோதிடர் முருகன். 1995இல் கொடுமுடியில் வாங்காமல் விட்ட பண்டிட் சேதுராமன் அவர்களின் அதிர்ஷ்ட விஞ்ஞானம் புத்தகமாகட்டும், ஹீப்ரு பிரமிடு நியூமராலஜிக்கான எண்ணமங்கலம் பழனிச்சாமி அய்யாவின் புத்தகமாகட்டும், இன்னும் பல எண்ணியல் சுட்சுமங்களை பற்றிய அரிய பொக்கிஷங்களாகட்டும் அனைத்தையும் ஒரு சேர கண்ணனுக்கு முருகன் கற்றுக் கொடுத்தார்.
ஏற்கனவே எண்ணியல் கலைக்கான ஆய்வில் இணைந்து செயல்பட்ட கணேசனுடன், இந்த இருவருக்கும் உயர்நிலை எண்கணிதத்தின் சூட்சுமங்களை கற்றுத் தந்த முருகனும் இணைந்து ஒரு பெரிய குழுவாக செயல்பட்டார்கள். கடந்த நான்காண்டுகளில் ஜோதிட கணிதம் ஜோதிட பலன்கள் எப்படி கூறுவது என்ற நுணுக்கங்களையும் கண்ணன் தெரிந்து வைத்திருந்தான்.
இப்பொழுது தானே 20 வயது ஆகிறது. இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து ஜோதிடராக மாறிவிடலாம் என, நண்பர்களுடன் கூறிக் கொண்டிருந்த கண்ணனுக்கு, ஜோதிடர் லிங்கம் அவர்களின் மூலம் ஜோதிடத் துறைக்கான அடுத்த வாசல் திறந்தது. "பரபரப்பான நாட்களில் தன்னிடம் ஜோதிட புத்தகம் எழுதுபவர்களுக்கு தன்னால் எழுதிக் கொடுக்க முடியவில்லை எனவே நீ இதனை எழுதி தர முடியுமா?" என ஜோதிடர் லிங்கம் கண்ணனிடம் கேட்க அந்த வாய்ப்பை உடனடியாக அவன் ஏற்றுக் கொண்டான்.
இதன் மூலமாக ஒரு ஜாதகத்தை கணிப்பதற்கு மற்றும் அஷ்டவர்க்கம், திசா புத்தி, ஷட்பல கணிதம் போன்ற பல்வேறு கணிதங்களை தானாக போட்டு பயிற்சி எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்பு கண்ணனுக்கு கிடைத்தது. மேலும் ஜோதிடர் லிங்கம் மூலமாக அதிர்ஷ்ட கல் பற்றிய அறிமுகமும் அப்போது கண்ணனுக்கு கிடைத்திருந்தது.
ராசிக்கல் பற்றிய அனுபவங்கள் வாழ்க்கையில் உண்டாக்கப் போகும் பிரச்சனைகள் பற்றியெல்லாம் அப்போது கண்ணனுக்கு தெரிந்திருக்கவில்லை.
தொடரும்....

6 - ஆரம்பம் ஆவது எண்ணாலே...

கொடுமுடிக்கு சென்று புத்தகம் வாங்க முடியாது போனது குறித்து ஏமாற்றத்தில் இருந்தாலும், எண்ணியல் குறித்த பல்வேறு சிந்தனைகளிலேயே கண்ணனின் அடுத்தடுத்த நாட்கள் சென்றுகொண்டு இருந்தது.

அப்போது உலகக்கோப்பை கிரிகெட் 1996 ஆரம்பம் ஆகி சென்று கொண்டு இருந்தது. இதில் எண்கணித கலையினை ஆராய்ச்சி செய்ய கிடைத்த அரிய வாய்ப்பாக கண்ணன் பயன்படுத்தினான்.
பிரமிடு முறை பற்றி கிடைத்த குறிப்புகளின் படி அணியின் வெற்றி தோல்விகளை பற்றி ஆராய தொடங்கினான்‌. அந்த புத்தக ஆசிரியர் கூறியபடி... ஒரு நபரின் கேள்வியினை ஆங்கிலத்தில் எழுதி வைக்கவும். அதனை பிரமிடு நெடுங்கணக்கில் விடை காணவும். இதன் விடையாக கிடைப்பது என்னவோ அதற்க்கு தக்க பலன் உண்டாகும் என்பது விதிமுறையாகும்.
அதன்படி, இந்தியகிரிகெட் அணி பாகிஸ்தானை வெற்றி பெறுமா? Will Indian cricket team beat Pakistan? என பிரமிடு கணக்கிடப்பட்டது. இதில் கேள்வி எண் 101, பிரமிடு எண் 9 (45) என வந்தது. இதன்படி இந்தியா செவ்வாயின் ஆதிக்கம் அதிகமாக இருப்பது தெரிந்தது. இதையே பாகிஸ்தான் இந்தியாவை வெல்லுமா என கணக்கிடப்பட்டது. Will Pakistan Cricket Team Beat India? இதில் கேள்வி எண் 96, பிரமிடு எண் 5 (59) என வந்தது.
மேற்கண்ட கணக்கின்படி பாகிஸ்தான் நன்றாக விளையாடும் ஆனால் கடைசியில் இந்தியா வெல்லும் என கணிக்கப்பட்டது. கிரிக்கெட் ஆட்டத்தை பார்க்க கண்ணனும் அவனது அப்பா மற்றும் நண்பர்கள் என அனைவரும் கூட்டமாக அருகேயிருந்த சொந்தக்காரரின் வீட்டிற்கு செல்லவேண்டும் . அல்லது ரேடியோவில் ஆங்கில வர்ணனை வரும். கடைசியில் பார்த்தால் கணக்கிட்ட படி இந்தியா வென்று விட்டது.
சூப்பர், எண்கணித கணக்கு சக்சஸ் எனும் மிதப்பில் மிதக்க ஆரம்பித்தான் கண்ணன். இந்தியா ஆறாவது உலகக்கோப்பை கிரிக்கெட் கோப்பையை வாங்குமா? என கேள்வி கேட்டு கணக்கிட்டான். Will India win sixth World Cup cricket trophy? கேள்வி எண் 141, பிரமிடு எண் 3 (66) இதில் கேள்வி எண் சுக்கிரன் பிரமிடு எண் குரு.
மேற்கண்ட படி கணக்கில் குரு சுக்கிரன் என இருவரின் அருளும் உள்ளதால் இந்தியா உலகக்கோப்பையை வெல்லும் என தனது 16ம் வயதில் முதல் உலகியல் ஜோதிட கணிப்பை கூறினான் கண்ணன்.
அப்படி எனில், 1996 ம் ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா தான் வென்றதா? மேலேயுள்ள கணிதம் சரியானதா? இவ்வளவு எளிதாக எண்கணித ஜோதிடராக மாறி விட முடியுமா? அவ்வளவு தானா எண்கணிதம் என படிக்கும் உங்களுக்கு இருந்த கேள்விகள் அன்று கண்ணனிடம் இல்லை. இந்திய பாகிஸ்தான் போட்டியில் தனது முதல் கணிப்பு வெற்றி பெற்றதும் கண்ணன் நியூமராலஜிஸ்ட் ஆகிவிட்டதாக உணர்ந்தான்.
அவனுக்கு அப்போது தெரியாது. பிரமிடு எண்ணியலுக்கான பயிற்சியில் எத்தனை இன்னல்களை எதிர்கொள்ளும் போகிறான்‌. அதனை பயன்படுத்தி எத்தனை ரகசியங்களை அறியப்போகிறான் என...
தொடரும்...

5 - ஆரம்பம் ஆவது எண்ணாலே...

நண்பர்கள் ஐவரும் கொடுமுடி மில் நல்ல தரிசனம் செய்து முடித்தார்கள். அம்மன் கோவில் பிரகாரத்தில் உள்ள புத்தக கடைக்கு வந்தார்கள். ஜோதிடம் நியூமராலஜி புத்தகங்கள் உள்ள பக்கம் பார்வையினை விரித்து தேடினார்கள்.

விதவிதமான தலைப்புகளில் பலவிதமான புத்தகங்கள் வரிசையாக வைத்திருந்தது. கண்ணன் கடைக்காரரிடம் நியூமராலஜி புக் இருக்காங்கணா என கேட்க, அவர் ஒரு மஞ்சள் நிற புத்தகத்தை எடுத்து தந்தார். அது பண்டிட் சேதுராமன் எழுதிய "அதிர்ஷ்ட விஞ்ஞானம்" விலை தள்ளுபடி போக நூற்று சொச்சம் வரும் என கூறினார்கள்.
கண்ணன் மற்றும் கணேசன் இருவரும் தான் புத்தகம் வாங்க ஆர்வத்துடன் இருந்தார்கள். ஆனால், அதன் விலை மிகவும் அதிகமாக இருந்தது என்பதால் ஏமாற்றத்துடன் இவர்கள் திரும்ப நேர்ந்தது. அந்த சைக்கிள் பாஸ் ல் இருந்த நான்காம் எண் வேலை செய்து விட்டது என பேசிக்கொண்டே வீடு திரும்ப முடிவெடுத்தனர்.
ஆனாலும், நூலில் உள்ள விசயங்கள் என்ன என்பதை கண்ணன் பார்க்க தவறவில்லை. தன்னிடம் உள்ள சிறிய புத்தகத்தின் விளக்கமான பதிப்பே அது என உணர்ந்தான். அதிர்ஷ்ட விஞ்ஞானத்தில் இல்லாத பல விசயங்கள் தான் வாங்கிய நூலில் உள்ளதையும் கவனித்தான். சரி. கிளம்பலாம் அண்ணா என அர்ஜுனன் அண்ணாவிடம் கூறிய கண்ணனும் அவர்களது நண்பர்களும்... எந்த புத்தகமும் வாங்காமலேயே திரும்ப கிளம்பினர். புத்தகத்தை புரட்டிப் பார்க்க தான் பத்துநாளா புலம்பிட்டு இருந்தியா என மீதமுள்ள நால்வரும் கண்ணனை கலாய்த்து கொண்டிருந்தாலும், அந்த பெரிய புத்தகத்தில் உள்ள பல்வேறு விசயங்கள் சுருக்கமாக நம்மிடம் உள்ளது என புரிந்த திருப்தி கண்ணனிடம் இருந்தது.
1996 ல் இந்தியா இலங்கை என பல நாடுகள் இணைந்து உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நடத்தியது. இதில் எண்கணிதப் படி ஏதேனும் கணக்கிட முடியுமா எனும் படி ஆய்வு செய்ய வேண்டும் என முடிவெடுத்து க்ணணன் அதற்கான குறிப்புகளை அவனிடம் இருந்த புத்தகத்தில் கண்டறிந்தான்.
அதில் இருந்த அற்புத விசயம் பிரமிடு நெடுங்கணக்கு நியூமராலஜி. பிரமிடு நியூமராலஜி என்றால் என்ன? இதிலிருந்து என்ன கணிக்க முடியும் என்பது ஒரு சவால் தான்.
தொடரும்...

24 June 2024

4 - ஆரம்பம் ஆவது எண்ணாலே...

காலை 7 மணி. பொழுது புலர்ந்தது கூட தெரியாமல் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் கண்ணன். எனக்கு டீ குடுத்தா தான் எழுந்திருப்பேன் என பத்து வயதிருக்கும் தம்பி மகேந்திரன் ரகளை செய்து கொண்டிருந்த சத்தம் கேட்டு எழுந்து வந்த கண்ணன் அம்மாவிடம் "கோயிலுக்கு போறோம்ல அம்மா... எழுப்பி விட்டு இருக்கலாம்னு..." என்றான்.

"வெகுநேரமா கழுதையா கத்திட்டு தாண்டா இருந்தேன். இங்க பாரு சின்னவன் எழுந்துடான். ஆனா நீ இப்பதான் வர்ர. வயசுதான் பதினாறு தாண்டுது. சட்டு புட்டு எழுந்து வேலைய பாத்தா தானே ஆவும். இதுவே மார்கழி மாசம் னா மட்டும் நால்ரைக்கே எழுந்துடுவே. இப்ப மட்டும் நான் எழுப்புனுமா" என்றாள் அம்மா.
வேறேதும் யோசிக்காமல் வேகவேகமாக ரெடியாகி ஏற்கனவே திட்டமிட்டபடி சரியாக 07:30 மணிக்கு வாடகை சைக்கிள் எடுத்துக் கொண்டு கண்ணனும் அவனது நண்பர்களான கணேசன் அர்ஜுனன் தாமோதர் குமார் ஆகியோரும் காவிரி ஆற்றங்கரைக்கு கிளம்பினார்கள்.
காவிரி ஆற்றினை கடக்க பரிசல் ஏறிதான் தாண்ட வேண்டும். சைக்கில்களை எல்லாம் தூக்கி போட்டுக்கொண்டு அதன் சந்துகளில் இவர்களையும் ஏற்றிக்கொண்டு பரிசல் கிளம்பியது. பரிசல் தள்ளுபவர் அந்த சிறுவர்களிடம் "கூட்டமா கிளம்பிடீங்க போல" என்றார். "ஆமாம் பாலுண்ணா. இன்னிக்கு அமாவாசை. தறிகாரங்களுக்கு இன்னிக்கு மட்டும் தானே விடுமுறை. அதான் கொடுமுடி கோயிலுக்கு போறோம்." என் அர்ஜுனன் கூறினான்.
சரிதான் தம்பி. இந்த ஜோதிடர் ஊருக்கு புதுசு போல... அந்தாண்ட கருவேலம்பாளையம் பஸ் ஸ்டாப்ல இவரை விட்டுவிட்டு போங்க என கூறிய பாலு அண்ணா ஒரு வயதான நபரை (வழக்கம்போல ஜோதிடர்னாவே வயசானவங்க தான் போல...) இவர்களின் கூட அனுப்பினார். இவர்கள் அமைதியாகவே அவருடன் நடந்து வந்தனர்.
பரிசலில் இருந்து இறங்கி ஒரு கிலோமீட்டர் மணலில் சைக்கிளை தள்ளிக்கொண்டு தான் போகனும். அந்த இடைவெளியில் "தம்பிகளா உங்க வயசு பசங்க லீவு விட்டா சினிமா பார்க்கு என போவாங்க. நீங்கள்லாம் கோவிலுக்கு அதுவும் ஆற்றை கடந்து 10 கிமீ போறீங்க. ரொம்ப சந்தோசம் யா." என பாராட்டிக் கொண்டே வந்தார் அந்த ஜோதிடர்.
கொஞ்ச தூரத்தில் எதிரே ஒரு மோட்டார் பைக் வந்தது. 1995 ல் மோட்டார் பைக் லாம் அதிசயமான வஸ்து என்பதால் அனைவரும் ஆ..கா.. என பார்த்தனர். வண்டியில் வந்தவர் அருகில் வந்ததும் இறக்கி அந்த ஜோதிடரை வணங்கி மரியாதையுடன் அவரின் பையை வாங்கி வண்டியின் முன்னால் வைத்துக் கொண்டு, (மூன்று கிமீ தாண்டி உள்ள) ஊஞ்சலூர் வரை கொண்டு விடுகிறேன் ஐயா என அந்த ஜோதிடரை அழைத்து சென்று விட்டார். (ஊஞ்சலூரில் எல்லா பேருந்தும் நிற்கும். கருவேலம் பாளையத்தில் டவுன் பஸ் மட்டும் நிற்கும்)
இதனை பார்த்த கண்ணனுக்கு மனதில் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் பற்றியது. இதேபோல் இவன் கைத்தறி பழக்கிய (பனிரெண்டு வயதில்) ஆறுமுக சித்தப்பாவை பார்க்க பலர் வருவதும்... தேங்காய் பழம் பூ வைத்து குரு தட்சணை என கூறி ஆசி பெறுவதுண்டு. அப்ப ஜோதிடர்னா கெத்து. எல்லா ஜோதிடரும் கெத்து தான் போல என கண்ணன் சிலாகித்து கொண்டான்.
இந்த சம்பவம் கண்ணனை விரைவில் ஜோதிடர் ஆக்கும் என அவனே நினைக்கவில்லை.
காலை 09:00 மணிக்குள் கொடுமுடி நகருக்குள் ஐவரும் நுழைந்து விட்டார்கள். சைக்கிள்களை ஸ்டேண்டில் நிறுத்தி பாஸ் வாங்கினார்கள். அந்த டிக்கெட் எண் என்னவென கணேசன் பார்த்தான். "கண்ணா, இந்த டிக்கெட் எண் நான்கு என வருகிறது. என்ன ஆகும் டா..." "நாம் வாங்கவந்த புக்க வாங்க மாட்டமா தெரியலையே" எனும் படி கோயிலுக்குள் நுழைந்து அம்மன் கோவில் பிரகாரம் உள்ள பக்கம் எட்டிப்பார்த்தான் கண்ணன். நல்ல வேளையாக புத்தக கடை இருந்தது.
அப்ப அந்த நான்காம் எண் கொண்ட டிக்கெட் என்ன பலனை தரும். அந்த கடை இருக்கே. எனும் சந்தேகத்தோடு மகுடேஸ்வரர் விஷ்ணு பிரம்மா என மும்மூர்த்திகளை ஐவரும் முதலில் தரிசனம் செய்தார்கள்.
தொடரும்....

3 - ஆரம்பம் ஆவது எண்ணாலே...

கண்ணனுக்கு முன்பாகவே கணேசனும் அர்ஜுனன் ம் காவிரிக்கரையில் அமர்ந்திருந்தார்கள். குமார் செந்தில் இருவரும் இன்னும் வரவில்லை. "அண்ணா தேர்ல வாங்கிய புத்தகத்தில் பல விசயங்கள் சூப்பரா இருக்கு." என அர்ஜுனனிடம் ஆர்வத்தில் உரையாட துவங்கினான் கண்ணன்.

"நாம் பிறந்த தேதி என்னவோ அதை ஒட்டித்தான் ஒருவரின் குணாதிசயம் அமைகிறதாம். நம்ம எல்லாருக்கும் சூப்பராக பொருந்துகிறது அண்ணா" கண்ணன்.
"பதினைந்து வயசு பையன் போல பேசு கண்ணா... அறுபது வயசு ஜோசியர் மாதிரி யோசிக்காதே. சரியா?" இது அர்ஜுனன்.
கணேசன் குறுக்கிட்டு "அண்ணா, கண்ணன் என்ன சொல்றான் என கேட்கலாம். நாமும் யோகா தியானம் வழிபாடு என ஏதேதோ செய்ய பிரயத்தனம் செய்கிறோம். அதற்கு எத்தனை தடைகள் வருகிறது. இவன் சொல்லும் விசயத்தில் ஏதாவது புதுசா கிடைக்கலாம் ல"
"ஆமாம் அண்ணா, என்னோட பேரு 46 ல் இருக்குங்கணா. அது எனக்கு செட் ஆகல போல. பாருங்க முதல்ல இருந்தே முதலிடம் போக முடியாம போக இதான் காரணமாம். எங்க வீட்டில் எல்லாருக்கும் பார்த்தேன். எதுவும் சரியில்லை."
அப்போது தான் வந்து சேர்ந்த செந்தில் "ஆமாம் கணேசன் அண்ணா. கண்ணன்னா கணக்கிட்டு பார்த்த போது நானும் அங்கே தான் இருந்தேன்."
உரையாடல் மிகவும் சுவாரஸ்யமாக போனது. கடைசியில் நேரமில்லை என்பதால் நாளை பேசிக் கொள்ளலாம் என கூறி கலைந்தனர். அடுத்த மூன்று நாளுக்குள் நான்கு பேரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயரையும் கண்ணன் கணேசன் ஆகியோர் ஆராய்ந்து பார்த்தனர்.
சிலநாள் கழித்து பெரிய சந்தேகம் வந்து விட்டது. யாருக்கு எந்த எண் பொருந்தும். எது மோசமானது... எது நல்லது. இதை அறிய என்ன செய்வது. இந்த குழப்பம் அடுத்த கட்ட பயிற்சிக்கு அடித்தளமிட்டது.
கண்ணன் கணேசன் என இரண்டு எண்ணியல் ஜோதிடர்கள் தங்களுக்கே தெரியாமல் தங்களை ஆராய ஆயத்தம் ஆனார்கள்.
மேலும்... இதுசம்பந்தமாக அறிய புதிய பெரிய புத்தகங்கள் வாங்க வேண்டும் என முடிவெடுத்து விட்ட அவர்களின் ஞாபகத்தில் வந்த இடம் தான் கொடுமுடி.
அங்கு பிரதி அமாவாசை அன்று கோவிலுக்கு உள்ளே அம்மன் சன்னதியின் முன்பாக புத்தக கடை சிறப்பாக வைக்கப்படும்.
இவர்களால் "கொடுமுடி போறோம். புக் வாங்குறோம்". என முடிவு செய்யப்பட்டது.
தொடரும்....

கட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்து

நாம் கட்டுகிற வீடு எவ்வளவு காலம் நிலைத்திருக்கும் என்பதை முன்கூட்டியே நம்மால் தெரிந்து கொள்ள முடியும். மனைச் சிற்ப சாத்திரத்தில்  இது பற்றிய தெளிவான விளக்கம் தரப்பட்டிருக்கிறது. பொதுவாக ஜோதிட  ஆராய்ச்சின் அடிப்படையில் இந் த கணக்கு நிர்ணயிக்கப் படுகிறது.

வீட்டின்  உரிமையாளரது ஜென்ம லக்கனத்திற்கு நான்கு பத்தில் சந்திரன் நின்று,  பதினொன்றில் குரு, செவ்வாய், சனி, ஆகியர்கள் இருந்து மனைக்கு மூகூர்த்தம்  செய்தால் அந்தக்கட்டிடம் ஏறத்தாழ 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கும்.  சுக்கிரன் உதயமாக 7-ல் குரு இருக்க 10-ல் சந்திரன் இருக்க கட்டிடம் 1000  ஆண்டுகள் நிலைத்து இருக்கும். 

லக்கினத்தில்  அல்லது 10-ல் சுக்கிரன் இருக்க மூன்றில் புதன் இருக்க குரு அஸ்தமனமாக  முகூர்த்தம் செய்தால் அந் த வீடு 200 ஆண்டுகளுக்கு மேல் உறுதியாக  இருக்கும். ஜென்ம லக்கினத்தில் சந் திரனும் நான்கில் புதனும் இருக்க குரு  அஸ்தமனமாக முகூர்த்தம் செய்தால் அந்த வீடு 100 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து  நிற்கும். 

வியாழன்  வெள்ளி வலமும் லக்கினம் 4,7- ல் சுக்கிரனும் 6 -ல் சூரியனும் மூன்றில்  குருவும் பெரிய மண்டபங்கள், மாளிகைகள், கோபுடம் ஆகியவற்றைக் கட்டினால்  ஆயிரம் ஆண்டுகளுக்கு குறையாமல் நிலைத்து நிற்கும்.

அனுமன் பெற்ற அற்புத வரங்கள்

ஸ்ரீராமபிரானின் பட்டாபிஷேகக் கொண்டாட்ட வைபவங்கள் முடிந்த பின்,  ஆசுவாசமாக ஸ்ரீராமபிரான் ராவணாதியரின் பலம், தபம், வரம் முதலியவை பற்றிய  சந்தேகங்களை அகத்திய மாமுனிவர் விளக்குவதாக, ஸ்ரீவால்மீகி ராமாயணத்தின்  உத்தரகாண்டம் அமைந்திருக்கிறது.

ஸ்ரீராமர், ஒரு நியாயமான கேள்வியை எழுப்புகிறார்: “வாலி மிகுந்த  பலசாலிதான். ராவணனையே தோற்கடித்து அவனைத் தனது கையில் இடுக்கிக்கொண்டு  பல சமுத்திரங்களுக்கும் சென்று தனது நித்ய கர்மானுஷ்டானங்களைச் செய்து,  ராவணனுக்குச் சொல்ல முடியாத துன்பத்தை அளித்தான். இருப்பினும் ஆஞ்சநேயன்  வாலி, ராவணன் இவர்களையும்விட மிகப் பலம் வாய்ந்தவர். அப்படியிருந்தும்  வாலி, சுக்ரீவனைத் துன்புறுத்தி கிஷ்கிந்தையை விட்டுத் துரத்தியபோது  ஆஞ்சநேயர் ஏன் சுக்ரீவனுக்கு உதவவில்லை?” என்று அகத்தியரிடம் கேட்கிறார்.

அப்போது தான் ஸ்ரீராமருக்கு, ஆஞ்சநேயரின் வரலாற்றைக் கூறுகிறார் அகத்தியர். “அஞ்சனாதேவிக்கு ஆஞ்சநேயர் பிறந்தபோதே, மிகுந்த பலசாலியான குழந்தையாக  விளங்கினார். அஞ்சனாதேவி, குழந்தைக்கு ஆகாரம் கொண்டு வரச்  சென்றிருந்தபோது, மிகவும் பசியுடன் இருந்த குழந்தை ஆஞ்சநேயன், சூரியனை  ஒரு பழம் என்று நினைத்து அதைப் பறித்து உண்ண விரும்பி சூரியனை நோக்கி  வானில் பாய்ந்தார். ஆனால் சூரியன், ஸ்ரீராமபிரானுக்கு இந்த ஆஞ்சநேயன் உதவி  செய்ய வேண்டுமென்பதை உணர்ந்து, குழந்தைக்குத் தீங்கு எதுவும் செய்யவில்லை.  ஆனால், அன்றைக்குச் சூரிய கிரகணம். ராகு, சூரியனை விழுங்குவதாக ஏற்பாடு.  தனக்குப் போட்டியாக சூரியனை நெருங்கும் ஆஞ்சநேயனைப் பார்த்து வெகுண்ட  ராகு, இந்திரனிடம் சென்று முறையிட்டார் (ஏனெனில், சூரியனைப் பிடிக்க  விரும்பிய அனுமன், ராகுவையும் பிடிக்க முயன்றார்).

இந்திரன், ராகுவையும் அழைத்துக்கொண்டு மிகுந்த கோபத்துடன் அனுமனை அணுக,  அவர் ஐராவதத்தையும் ஒரு பெரிய பழமென்று நினைத்து அதை நோக்கிப்  பாய்ந்தார். இதனால் இன்னும் கோபமுற்ற இந்திரன், குழந்தை என்றும்  பார்க்காமல், அனுமனைத் தனது வஜ்ராயுதத்தால் அடித்தார். அடியுண்ட அனுமன்  இடது தாடை உடைபட்டு விழுந்தார். இறந்தது போலவே கிடந்தார்.

தனது மகன் இந்திரனால் தாக்கப்பட்டு உயிரிழந்ததுபோல் கிடந்ததைக் கண்டு  வருந்திய வாயு பகவான், அந்தக் குழந்தையைத் தனது மடியில் கிடத்தியவாறு தனது  இயக்கத்தை நிறுத்திவிட்டார். வாயுவின் இயக்கம் இல்லாததால், அனைத்து  ஜீவராசிகளும் மிகவும் துன்பப்பட்டனர். இதற்கு தேவர்களும்  கந்தர்வர்களும்கூட விதிவிலக்-கல்ல. எனவே, அனைவரும் பிரம்மாவிடம் சென்று  முறையிட... அவர் அனைவரையும் அழைத்துக்கொண்டு வாயு பகவானிடம் வந்தார்.

இறந்துகிடந்த குழந்தையைக் கண்டு, பரிதாபமும் இரக்கமும் கொண்ட பிரம்மா  தனது கரத்தால் அதைத் தடவிக் கொடுக்கவும், அனுமன் மீண்டு எழுந்தார்.  பிரம்மா அனைத்து தேவர்களையும் நோக்கி, ‘இந்தக் குழந்தையால்தான், ராவணன்  முதலிய அரக்கர்களால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தைத் தீர்க்க  முடியும். அதனால் இவனுக்கு வேண்டிய அளவு நல்ல வரமளியுங்கள். அதன்மூலம்  வாயு பகவானும் திருப்தி அடைவார்’ என்று சொன்னார்.

இதன்பின்னர் சூரியன், தனது ஒளியில் 100-ல் ஒரு பங்கை ஆஞ்சநேயருக்கு  அருளினார். மேலும், தானே அனுமனுக்கு வேதங்கள், சாஸ்திரங்கள் அனைத்தையும்  போதித்து, கல்வியில் சிறந்தவனாகச் செய்வதாக ஒப்புக்கொண்டார்.

வருணன் - காற்றாலோ, நீராலோ அவருக்கு மரணம் ஏற்படாது என்றார். யமதர்மன்,  யம தண்டத்திலிருந்தும் நோய்களினின்றும் அனுமன் பாதிக்கப்பட மாட்டார் என  வரமருளினார். குபேரன், அனுமன் யுத்தத்தில் சோர்வே அடைய மாட்டார் என்றார்.  சிவபெருமான், தனது அஸ்திரங்களினாலோ, தனது கரங்களினாலோ மரணம் ஏற்படாது  என்றார்.

விஸ்வகர்மா, தன்னால் இதுவரை செய்யப்பட்ட ஆயுதங்களாலோ, இனிமேல் தான்  செய்யும் ஆயுதங்களாலோ ஆஞ்சநேயர் பாதிக்கப்பட மாட்டார் என்றார்.  பிரம்மதேவர், ஆஞ்சநேயர் சிரஞ்சீவியாக இருப்பார் என்றும், பிராமணர்களால்  சாபம் அளிக்கப்பட மாட்டார் என்றும் அருளினார். மேலும், அனுமன் தான்  விரும்பிய வடிவம் எடுக்கவும், ஒருவரிடமும் பயமோ, யுத்தத்தில் தோல்வியோ  அடைய மாட்டார். நினைத்த இடத்துக்கு நினைத்த வேகத்தில் அவரால் செல்ல  முடியும் என்றும் வரமளித்தார். இந்த வரங்களினால் திருப்தியுற்ற வாயு  பகவான் தனது இயக்கத்தைத் தொடங்கினார்.

தனக்களிக்கப்பட்ட வரங்களால் பெருமை கொண்ட அனுமன், காட்டில் தவம், யாகம்  செய்துவந்த முனிவர்களுக்கு விளையாட்டாக மிகவும் தொல்லை கொடுக்கவே,  அவர்கள் அனுமனுக்குத் தனது பலம் தெரியாமல் இருக்கவும், யாராவது அதைப்  பற்றி நினைவுறுத்தினால் மட்டுமே அதை அவர் உணர முடியும் என்று சொல்லி,  அவர் தனது உண்மையான பலத்தைப் பற்றி அறியாதவாறு செய்துவிட்டபடியால்தான்,  ஆஞ்சநேயரால் தனது பலத்தை உணர்ந்து சுக்ரீவனுக்கு உதவ முடியாமல் போனது”  என்று ஸ்ரீராமபிரானுக்கு விளக்குகிறார் அகத்தியர்.

சுந்தர காண்டத்தில்கூட, ஆஞ்சநேயருக்கு ஜாம்பவான், அவரது பலத்தையும்  பராக்கிரமத்-தையும் எடுத்துக் கூறி நினைவூட்டியதால்தானே, அவரால் செயற்கரிய  செயல்களைச் செய்ய முடிந்தது.

புத்திர்-பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா

அஜாட்யம் வாக் படுத்வம் ச ஹநூமத் ஸ்மரணாத் பவேத்

‘புத்தி, பலம், புகழ், தைரியம், பயமின்மை, நோயின்மை, சோம்பலின்மை, தெளிந்த வாக்கு ஆகியவை, அனுமனை நினைப்பதால் சித்திக்கும்.

01 June 2024

2 - ஆரம்பம் ஆவது எண்ணாலே...

பக்கம்-2

உறக்கத்தில் இருந்த கண்ணனின் நினைவுகள் அடுத்த நாள் கொடுமுடிக்கு செல்வதிலேயே இருந்தால் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டு இருந்தான். அந்த எண்கணித புத்தகம் வாங்கிய நினைவுகள் ஓடிக்கொண்டு இருந்தது.
அன்று மட்டும் அது நடக்காமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும் என எப்போதும் அவன் நினைத்துக்கொண்டு இருப்பான். அன்று கபிலர் மலை முருகனுக்கான தை பூசத் தேர் திருவிழாவின் அடுத்த நாள். அருகில் உள்ள ஊர்களில் இருந்து அனைவரும் கடைவீதி சுற்றி பார்க்க கிளம்பி சாரிசாரியாக சுற்றிக் கொண்டு இருந்தார்கள்.
அந்த காலகட்டத்தில் இந்த ஒரு நாளுக்காக சிறுவர்கள் வருடம் முழுதும் கனவு கண்டு காத்திருப்பார்கள். திருவிழாவில் மட்டும்தான் புத்தக கடை போடுவார்கள். அதில் பல்வேறு புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். திரைப்பட பாட்டு புத்தகமும் இருக்கும். அந்த ஆண்டில் வெளியான சூப்பர் ஹிட் படங்களான, காதலன் டூயட் மேமாதம் போன்ற படங்களின் பாடல்கள் உள்ள ஹிட் திரைப் பாடல்கள் புத்தகத்தை வாங்க கண்ணன் ஆர்வமுடன் போயிருந்தான்.
கடையின் முன் நண்பர்கள் உறவினர்கள் என நின்று புத்தகங்களை எடுத்து புரட்டி கொண்டு இருந்த போது... 1994-95 ஹிட்ஸ் எனும் புத்தகத்தை கண்ணன் ஆர்வமுடன் எடுத்து பார்த்தான். விலை ரூ 4.50 என இருந்தது. பற்கள் 28 ம் தெரிந்தது அவனுக்கு.
வாங்கிடலாம் என கல்லாவிற்கு நகரும் போது... "ஏன்டா நாலு கழுதை வயசு ஆவுது. சினிமா பாட்டு புக் வாங்குரியே... உருப்படுவியா நீ. ஏதாவது படிப்புக்கு உதவுறா மாதிரி ஏதாவது புக்கு வாங்க மாட்டே." இது அருகில் இருந்த ஏதோ ஒரு சிறுவனின் பெற்றோர் அவனை திட்டிய வார்த்தைகள்.
இவனுக்கும் ஏதோ உறுத்தியது. சரி என பாடல் புக் வேண்டாம். தம்பிக்கு வாய்ப்பாடு கணித புக் வாங்கி தரலாம் என முடிவெடுத்தான். சட்டென கண்ணில் பட்ட எண்கள் அரிச்சுவடி எனும் புத்தகத்தை வாங்கி கொண்டு பையில் போட்டுக் கொண்டான். நண்பர்களுடன் தேர்வீதி சுற்றிவிட்டு இரவு வீடு வந்து சேர்ந்தான்.
அடுத்த நாள் காலையில், கைத்தறியில் நெசவு வேலையில் இருந்த கண்ணனின் அப்பா "இன்று தான் தம்பியின் மீது அக்கரை வந்ததா" என விசாரித்துக் கொண்டே அந்த புத்தகத்தை விரித்து படித்தார். "கண்ணன் னு பேர்ல தான் இருக்கு. மண்டைல இருக்காப்டி தெரியலை. அரிச்சுவடி வாங்குனேன்னு சொல்லி, எண்கணிதம் அடிப்படை புக்க வாங்கிட்டு வந்து இருக்க." என்றார்.
அட... என்றபடி எண்கணித புத்தகத்தை வாசித்தான் கண்ணன். ஜோதிடம் பஞ்சாங்கம் கணிதம் என தாத்தாவின் மூலம் சில விசயங்களை கேள்விப்பட்ட அவனுக்கு எண்கணிதம் என்பது முற்றிலும் புதுமையாகவே இருந்தது.
நெசவு வேலையில் மனம் செல்லா நிலையில்... எண்கணிதம் புத்தகத்தில் இருந்து அதிசயங்களை பற்றி சொல்லியே தீர்வதென மாலை 06:00 மணிக்கு காவிரிக் கரையில் நண்பர்களை சந்திக்க ஆவலுடன் கிளம்பினான் கண்ணன்.
தொடரும்....

ஆரம்பம் ஆவது எண்ணாலே... (எண்ணியல் ஜோதிடர் தொடர்)

 பக்கம்-1

    உலகில் எது முதலாவதாக தோன்றியிருக்கும் என்ற சிந்தனையுடன், ஆகாயத்தை வெறித்துப் பார்த்து கொண்டிருந்த அவனுக்கு நேரம் காலம் கடந்தது எல்லாம் தெரியவேயில்லை. "அடேய் கண்ணா, என்னடா மயக்கம் ஏதும் போட்டுட்டாயா" என அதிரும் குரலுடன் எழுப்பி விட்ட நண்பனின் குரலால் மீண்டு எழுந்தான் கண்ணன். அட மணி 09:00 ஆயிடுச்சா என விருட்டென்று எழுந்த அவனை நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் காவிரி ஆற்றின் குளிர்ந்த காற்றும் சலசலக்கும் நீரோட்டமும் "இன்னும் கொஞ்சநேரம் இருந்தா தான் என்ன" என பாடி அழைத்தது போல இருந்தது.

07:00 மணிக்கு வந்த நீ, ஒன்பது மணிக்கு கூட வீட்டுக்கு போகலைன்னா நல்லாவா இருக்கு என திட்டிய நண்பனை முறைத்துப் பார்த்தான் கண்ணன். "நீ என்ன பண்ணிட்டு இருந்த கணேசு" பதிலுக்கு பதிலாக திட்டப் பார்த்த கண்ணனை, "சீக்கிரமா போய் தூங்கு டா... நாளைக்கு அமாவாசை. வெயிலுக்கு முன்னாடி கொடுமுடிக்கு போகனும். நேரமானால் சைக்கிள் கடைல உள்ள சைக்கிள் எல்லாம் வாடகைக்கு எடுத்துடுவாங்க. அர்ஜுன் அண்ணா கடைகாரங்க கிட்ட ஐந்து சைக்கிள் வேணும் என சொல்லி வெச்சிருக்காராம்." என்றான் கணேஸ்.
இது மாசி மாதம் அமாவாசை. போன பௌர்ணமி தைபூசம். அதை அடுத்து கடந்த பத்து நாளாக தினமும் கொடுமுடி போவது பற்றியே திட்டமிட்டு வந்ததையும், அதற்காக வெள்ளிக் கிழமைகளில் அப்பா தந்த சந்தை காசுவை மிச்சம் பிடித்து வைத்ததையும் அசை போட்டுக்கொண்டு வீட்டுக்கு போய் சேர்ந்தான் கண்ணன்.
சாப்பிட்டு முடித்த பின் தூங்கும் முன்னர், மீண்டும் ஒருமுறை அதை எடுத்து பார்த்து விடலாம் என பெட்டியினை ஆர்வத்துடன் திறந்து பார்த்தான். திடீரென ஒரு அலரல் "அம்மா... அண்ணெ திரும்ப அந்த புத்தகத்தை எடுத்து படிக்க போறான்" இது கண்ணனின் தங்கை மஞ்சுவின் குரல். "ஆமாம் அம்மா அண்ணன் புக்கை எடுத்தார்" இது தம்பி மகேந்திரனின் சாட்சியம். "இல்லைங்க அம்மா" என்ற படி அமைதியாக அந்த புத்தகத்தை அங்கேயே வைத்து விட்டு உறங்கிப்போனான் கண்ணன்.
அந்த புத்தகம் தான் அவன் வாங்கிய முதல் நியூமராஜி புத்தகம் "எண்கணிதம்"
விலை ரூ 5.. (1995)