கண்ணன் கூறியபடி நடக்காமல் போனது. உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்தியா வெளியேறி விட்டது. அதன்பின்னர் தான் ஒரு உண்மை புரிந்தது. கேள்வி வாக்கியத்தை வைத்து பிரமிடு கணக்கு செய்வது சரிவராது. அதே கேள்வியின் ஒரு வார்த்தை மாறினாலும் கூட கணக்கு மாறி விடுகிறது என்பதை அதன் பின்னர் தான் கவனித்தான். அதன் பின்னர் 1996 ன் இறுதி மாதங்கள் வரை மீண்டும் மீண்டும் பல்வேறு பெயர்களை நியூமராலஜி படி ஆராய்ந்து வந்த கண்ணன் ஏதோ புரிந்தது போல உணர்ந்தான். பெயருக்கும் அதன் பிரமிடு எண்ணுக்குமான தொடர்பை உணரமுடிந்தது.
இந்த கணக்குகளை போடுவதற்கு நிறைய நோட்டுகள் தேவைப்பட்டது. இது பெரிய செலவாக பட்டது அவனுக்கு. இதனால் கண்ணனின் கைத்தறி தொழில் பெரிய அளவில் வருமானம் இழப்பு உண்டானது. இருந்தாலும் கூட எண்கணிதம் மீது இருந்த ஆர்வம் குறையவில்லை.
இதன் இடையே ஜோதிடம் சார்ந்த பல்வேறு தகவல்களை படிக்க தொடங்கினான். கண்ணனின் பொருளாதாரம் புத்தகங்களை விலை கொடுத்து வாங்க அனுமதிக்காத அந்த காலகட்டத்தில், அவனின் தாத்தா வாங்கி வைத்திருந்த சில அற்புதமான ஜோதிட புத்தகங்கள் இவனுக்கு உதவியது. இதில் முக்கியமானது குடும்ப ஜோதிடம் "தி லிட்டில் பிளவர் கம்பெனி" வெளியீட்டில் வந்த (முதல் பதிப்பு) புத்தகம் இவனுடைய தாத்தாவிடம் இருந்தது.
அந்த ஒரு புத்தகத்தையே மீண்டும் மீண்டும் படிப்பதும் அதில் உள்ள ஜாதகம் கணிக்கும் கணிதத்தை பல்வேறு தேதிகளை வைத்து போடுவதும் என கண்ணனின் ஜோதிட பயணம் தொடர்ந்தது.
ஆண்டுகள் சில கடந்தன இது 1999. 2000 ஆண்டு திறக்க உள்ளதை கொண்டாடும் வகையில் உள்ளூரில் உள்ள சிறுவர்கள் இளைஞர்கள் இணைந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தனர். கண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து மேஜிக் ஷோ ஒன்றை ஏற்பாடு செய்தனர். இதில் மேஜிக் நிபுணராக பிளேடுகளை விழுங்கி அதை சரமாக எடுப்பது போன்ற அபாயகரமான பல்வேறு மேஜிக் கலை செய்து அசத்தினான் கண்ணன். இதனால் ஊருக்குள் தனது 20வது வயதிலேயே நல்ல அறிமுகம் கிடைத்தது.
அந்த காலகட்டத்தில் அறிமுகமான அற்புதமான நண்பன் முருகன். மூன்று ஆண்டுகளாக நின்று விட்டிருந்த எண்ணியல் கலையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவிய எண்கணித ஜோதிடர் முருகன். 1995இல் கொடுமுடியில் வாங்காமல் விட்ட பண்டிட் சேதுராமன் அவர்களின் அதிர்ஷ்ட விஞ்ஞானம் புத்தகமாகட்டும், ஹீப்ரு பிரமிடு நியூமராலஜிக்கான எண்ணமங்கலம் பழனிச்சாமி அய்யாவின் புத்தகமாகட்டும், இன்னும் பல எண்ணியல் சுட்சுமங்களை பற்றிய அரிய பொக்கிஷங்களாகட்டும் அனைத்தையும் ஒரு சேர கண்ணனுக்கு முருகன் கற்றுக் கொடுத்தார்.
ஏற்கனவே எண்ணியல் கலைக்கான ஆய்வில் இணைந்து செயல்பட்ட கணேசனுடன், இந்த இருவருக்கும் உயர்நிலை எண்கணிதத்தின் சூட்சுமங்களை கற்றுத் தந்த முருகனும் இணைந்து ஒரு பெரிய குழுவாக செயல்பட்டார்கள். கடந்த நான்காண்டுகளில் ஜோதிட கணிதம் ஜோதிட பலன்கள் எப்படி கூறுவது என்ற நுணுக்கங்களையும் கண்ணன் தெரிந்து வைத்திருந்தான்.
இப்பொழுது தானே 20 வயது ஆகிறது. இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து ஜோதிடராக மாறிவிடலாம் என, நண்பர்களுடன் கூறிக் கொண்டிருந்த கண்ணனுக்கு, ஜோதிடர் லிங்கம் அவர்களின் மூலம் ஜோதிடத் துறைக்கான அடுத்த வாசல் திறந்தது. "பரபரப்பான நாட்களில் தன்னிடம் ஜோதிட புத்தகம் எழுதுபவர்களுக்கு தன்னால் எழுதிக் கொடுக்க முடியவில்லை எனவே நீ இதனை எழுதி தர முடியுமா?" என ஜோதிடர் லிங்கம் கண்ணனிடம் கேட்க அந்த வாய்ப்பை உடனடியாக அவன் ஏற்றுக் கொண்டான்.
இதன் மூலமாக ஒரு ஜாதகத்தை கணிப்பதற்கு மற்றும் அஷ்டவர்க்கம், திசா புத்தி, ஷட்பல கணிதம் போன்ற பல்வேறு கணிதங்களை தானாக போட்டு பயிற்சி எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்பு கண்ணனுக்கு கிடைத்தது. மேலும் ஜோதிடர் லிங்கம் மூலமாக அதிர்ஷ்ட கல் பற்றிய அறிமுகமும் அப்போது கண்ணனுக்கு கிடைத்திருந்தது.
ராசிக்கல் பற்றிய அனுபவங்கள் வாழ்க்கையில் உண்டாக்கப் போகும் பிரச்சனைகள் பற்றியெல்லாம் அப்போது கண்ணனுக்கு தெரிந்திருக்கவில்லை.