ஸ்ரீ நவபிருந்தாவனம்( ஸ்ரீ பாதராஜமடம் ) சந்நியாசிமடம்,
வழிகாட்டும் பலகை(வசந்த நகர்) |
இந்த பிருந்தாவனம் இந்தியாவிலேயே தொன்மையில் இரண்டாவதாக கூறப்படுகிறது. ஜாதகத்தினில் குரு தோஷம் உள்ளவர்கள், வியாழன் அன்று சென்று சிறப்பு வழிபாடு செய்யலாம். மேலும் இந்த கோவிலில் ஆண்கள் தங்கள் மேல் சட்டை, பனியன் ஆகியவற்றை அணியாமல் தரிசிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். பெண்கள் சேலை அணிந்து சென்று வழிபாடு செய்தால் ஜீவா சமாதிகளின் ஜீவா காந்த சக்தியினை தடையின்றி பெற்று பலன் பெறலாம். அற்ப்புதம் நிறைந்த சித்தர்களின் அருள் பெற அனைவரும் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டிய கோவில் இது.
நவபிருந்தாவனத்தில் அருள்பாலிக்கிற நவநாயகர்கள்:
1. ஸ்ரீ லட்சுமி மனோகர தீர்த்தர்: கர்நாடகாவில் பிறந்த இவர் கி.பி 1670முதல் 1708 வரை வாழ்ந்தவர். ஸ்ரீ பாதராஜர் மடத்தின் 8வது பீடாதிபதியாவார் . பாரதம் முழுவதும் சஞ்சாரம் செய்து வேததர்மம் , ஒழுக்கம் பக்தி ஆகியவற்றை மக்களுக்கு போதித்தவர் . இவர் ஒசூர் பகுதி யாத்திரையின் போது கடும் பஞ்சம் நிலவுதை கண்டு மக்கள் குறையால் மனமுருகி ஸ்ரீ ஆஞ்சநேயவிக்கிரகத்துடன் ஓர் ஆலயத்தை அமைத்து ஸ்ரீ ஆஞ்சநேய விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து பூஜிக்க கடும் மழை பெய்து அப்பகுதி மக்களின் பஞ்சம் தீர்ததாக வரலாறு . சர்வதாரி வருடம் தைமாதம் பெளர்ணமி தினத்தில் முதல் ஜீவசமாதியாக நவ பிருந்தாவனத்தில் முதல்பிருவனஸ்தராகிவிட்டார்.
2. ஸ்ரீ லஷ்மிபதி தீர்த்தர்: இவர் ஸ்ரீ லஷ்மி மனோகர தீர்த்தரின் சீடர் ஆவார் . திரிகால ஞானி ஸ்ரீ ஹரி கீர்த்தனைகள் பாடி பக்தர்கள் வியாதிகளில் இருந்து காத்து அருளியவர் . இவர் பிருந்தாவனத்திற்கு அருகில் இருந்த சுண்டைக்காய் உண்ட பலரும் சாகும் தருவாயில் பிழைத்துள்ளதாக வரலாறு. இவர்க்கு சுண்டைகாய் தீர்த்தர் என்றும் கூறுவர். இவர் வைத்தியராக வாழ்ந்த மகான். தனக்காக பிருந்தாவனம் நிர்மாணிக்க சிற்பிக்கு உத்திரவிட்டார் . அப்படி இம்மகானின் பிருந்தாவனம் தயார் செய்த போது பாம்பு தீண்டி சிற்பியின் மகன் இறந்துவிட்டாதாக கேள்விப்பட்டு பதற, மகான் சிற்பியை கூப்பிட்டு உன் மகன் சற்று நேரத்தில் உயிர்பெற்று வருவான் என கூறி, கருட மந்திரத்தை தியானித்து காப்பாற்றினார். மந்திரப்பிரயோகம். யந்திரப்பிரதிஷ்டை, தாந்திரிகம் ஆகிய கலைகளில் நிபுணராவார். பல அற்புதங்கள் புரிந்து நவ பிருந்தாவனத்தில் 2வதாக ஆஷாட சுத்தி ஆடி ஏகாதசியில் பிருந்தாவனஸ்தரானார்.
3. ஸ்ரீ நிதி தீர்த்தர்: ஸ்ரீ பாதராஜ அஷ்டாகம் என்ற ஸ்தோத்திரத்தை உலகிற்கு உணர்த்திய மகான். மகாவிஷ்ணுவிடம்அதீத பக்தி கொண்டவர்.
4. ஸ்ரீ வித்யாநிதி தீர்த்தர்: ஜபதவ அனுஷ்டானங்களை செய்து கொண்டிருந்தவர் இவர் தியானத்தை மெச்சி இறைவனே, ஸ்ரீ பாண்டுரங்க விட்டல சுவாமி தம்பதி சமேதாராக காட்சி அளித்தவர் , 14வது பீடாதிபதியானவர் வித்வான் , எழுத்தாளர் , இலக்கியவாதியாவார் ,மைசூர் மகாராஜவிற்கு தர்மநெறிப்படி மன்னர் ஆட்சி செய்யும் நெறிமுறைகளை உபதேசித்த மகான் இவரை வணங்குபவர் கல்வியில் சிறப்பர்.
5. ஸ்ரீ சுதிநிதிதீர்த்தர்: 23வது மடாதிபதியாவார் . மத்வ சிந்தாந்தத்தின் உயர்ந்த கிரதமான ஸ்ரீ மந்நியாயசுதா என்ற கடினமான கிரந்தத்தை மிக எளிய முறையில்அநேகர்க்கு கற்பித்த மகான் . தன் வாழ்நாழ் முழுவதும் சூரிய உதயத்திற்கு முன் நீராடி ஸ்ரீ கிருஷ்ணபகவானை பூஜித்து வந்த திவ்ய புருஷர் . இவரின் முக்கிய உபதேசம் ஏகாதசி அன்னம் உண்பதை தவிர் , தினமும் மத்வாச்சாரியாரின் கிரந்தங்களை படித்து பகவானை பூஜிக்கவேண்டும் . கடன் வாங்கி எக்காரியமும் செய்யக்கூடாது . இவர் திருச்சனூரில் வேத வியாசபகவானை பிரதிஷ்டை செய்து பூஜித்தவர்.
6. ஸ்ரீ மேதாநிதி தீர்த்தர்: இவர்ஸ்ரீ சதிநிதி தீர்த்தரிடம் சந்நியாசம் பெற்றவராவார் . மகான் ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர் அருளிய சந்திரிகா என்ற கிரந்தத்தின் மூலப்பிரதியை கைப்பட எழுதியவர் , விலைமதிக்க முடியாத இவரின் கையெழுத்துப்பிரதி மைசூர் ஓரியண்டல் நூலகத்தில் அமைந்துள்ளது . ஆந்திராவில் யாத்திரையின் போது புலி வர பயப்படாமல் அபிஷேக தீர்த்தம் கொடுத்து மந்திர அட்சத்தையால்புலியை ஆசிர்வதித்தாக வரலாறு உண்டு.
7. ஸ்ரீ தேஜோ நிதி தீர்த்தர்: இராமநாதபுரம் மாவட்டம் இளையான் குடி வட்டத்தை சேர்ந்தவராவார் . துவைத சிந்தாந்த கொள்கையை கடைபிடிப்பதே உண்மையான முக்தி நிலை என்று உணர்ந்தவர். இவர் ஸ்ரீ லட்சுபதி தீர்த்தர் காலத்தில் சேவை புரிந்தவராவார்.
8.ஸ்ரீ தபோநிதி தீர்த்தர்: ஸ்ரீதோஜோநிதி தீர்த்தரின் சீடர் தம் 37 வது வயதில் துறவறம் பூண்டு கி.பி 1806 முதல்1838 வரை ஓடப்பள்ளி ஸ்ரீ பாதராஜ மடத்தை நிர்வாகம் செய்தவராவார்
9.ஸ்ரீயசோநிதிதீர்த்தர்: கி.பி1840ஆம் ஆண்டு தை மாதம் வளர்பிறை தசமியன்று தம் குரு ஸ்ரீ தபோநிதி தீர்த்த மகான் அருகில் பிருந்தாவனம் ஆனார்.
இவர்கள் அல்லாமல் மேலும் 2 ஜீவசமாதிகள் வெளிப்புறத்தில் அமையப் பெற்றுள்ளது சிறப்பாகும். அவர்கள் ஸ்ரீ நாக மகா தீர்த்தர் மற்றும் ஸ்ரீ ராமதீர்த்தர் ஆகியோராவர்.
ஸ்ரீநாகமகாதீர்த்தர்: நவபிருந்தாவனத்திற்கு வெளியில் நுணா மரத்தடியில் உள்ள தீர்த்தர் ஸ்ரீ நாக மகா தீர்த்தர் . இவரும் கர்நாடக மாநிலம் மங்களுருக்கு அருகில் உள்ள நேத்ராவதி நதி அருகிலுள்ள பகுதியிலிருந்து இங்கு வந்து ஊழியம் செய்து இங்கேய பிருந்தாவனம் ஆகிவிட்டதாக வரலாறு . பெரிய நாகம் ஒன்று ஸ்ரீ நாக மகா தீர்த்தருக்கு காவலாக உள்ளதை பலரும் பார்த்துள்ளார்கள் . ஸ்ரீ நாகமகா தீர்த்தருக்கு 12வாரங்கள் நெய் தீபமிட்டு பூஜித்து வந்தால் விரைவில் நம்கோரிக்கை நிறைவேறும் . நாகதோஷநிவர்த்தியாகிறது . இவரின் ஜீவ சமாதி 10வதாக இங்கே தரிசிக்கலாம்.
ஸ்ரீ ராமதீர்த்தர்: நவபிருந்தாவனத்தில் மதில் சுவர்க்கு வெளியே வாயிற்கதவருகே அமைந்துள்ள பிருந்தாவனத்தை அலங்கரிப்பவர் ஸ்ரீ ராமதீர்த்தர் ஆவார் . கருங்கல்பாளையம் பாறை விநாயகர் கோவில் தெருவில் வசித்து சித்த வைத்தியம்செய்தவர் , ஏழைகளுக்காக இலவச மருத்துவம் செய்தவர் . சமஸ்கிருத புலமையும் ஆன்மீக அறிவும் கொண்டவர் 1990 ல் ஆசிரமம் மேற்கொண்டு 9 மத்வ நவமியன்று நவபிருந்தாவனத்தில் 11 வது பிருந்தாவனஷ்தராகி விட்டார்.
திறப்பு நேரம்:
காலை 7 .00மணி முதல் 12 வரையும் திறந்திருக்கும்.
வியாழக்கிழமை விஷேச பூஜைகள் மதியம் வரை நடைபெறுகிறது.
எத்தனையோ சித்தர்களும் மகான்களும் , யோகிகள் வாழ்ந்த புண்ணிய பூமி நம்பாரத பூமி . அந்தவகையில் நான் அண்மையில் கண்ட அழகிய அமைதியான அற்புதமான ஜீவசமாதியை உங்களுடன் பகிர்வதில் பெருமகிழ்வுருகிறேன் .
நவ ப்ருந்தாவனம் முகப்பு |
அமைவிடம்: நாமக்கல் மாவட்டம்
பள்ளிபாளையத்தில் இருந்து சேசாயி பேப்பர் மில் செல்லும் சாலையில், வசந்தநகர் என்ற இடத்தில் இருந்து காவிரிக்கரையின் கிழக்கு புறத்தில் கரைகாண முடியாத பல அற்புதங்கள் கொண்ட நவ பிருந்தாவனம் ஸ்ரீ பாதராஜ மடம் அமைந்துள்ளது . இப்பகுதிமக்களால் சந்தியாசி மடம் என்றும் முளபாகல் மடம்என்றும் அழைக்கப்படுகிறது. காலம்: கி.பி 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது அல்லது 300 வருடங்களுக்கு முற்பட்டது என்பது ஆய்விற்குரியது. இங்கு 1. ஸ்ரீ லஷ்மி மனோகர தீர்த்தர், 2.ஸ்ரீ லஷ்மிபதி தீர்த்தர், 3. ஸ்ரீ நிதி தீர்த்தர், 4. ஸ்ரீ வித்யாநிதிதீர்த்தர், 5. ஸ்ரீ சுதிநிதி தீர்த்தர், 6. ஸ்ரீ மேதாநிதி தீர்த்தர், 7.ஸ்ரீ தேஜோ நிதி தீர்த்தர், 8. ஸ்ரீ தபோநிதி தீர்த்தர், 9. ஸ்ரீ யசோநிதி தீர்த்தர், ஆகியோர்களின் ஜீவசமாதியை இங்கு தரிசனம் செய்யலாம் இவர்களைப்பற்றி...
ஸ்ரீபாதராஜர்:
ஸ்ரீ பாதராஜ மடத்தின் நிறுவனர் ஸ்ரீ பாதராஜர் ஆவார், இவர் கர்நாடக மாநிலம் அப்பூரை சேர்ந்தவர், லட்சுமி நாராயணன் என்பது இவர் இயற்பெயராகும். சேஷகிரியாச்சார் கிரியம்மா தம்பதிகளின் மகனாக பிறந்த இளம்வயதிலேயே தெய்வ அருட் குழந்தையாக வளர்ந்தார் . கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முளுபாகல் என்ற இடத்தில் இவரின் மூல பிருந்தாவனம் அமைந்துள்ளது கி.பி 1486 ல் பிருந்தாவனஸ்தரானார் . இவ்விடம் நரசிம்மதீர்தம் என அழைக்கப்படுகிறது . இந்த முளபாகல்மடம் தான் நாம் பார்க்க உள்ள நவபிருந்தாவனத்தின் தலைமை இடமாக கருதப்படுகிறது . பாதராஜமடத்தின் 36 வது மடாதிபதியாக 1987 முதல் 23 ஆண்டுகாலம் நிர்வாகம் செய்தவர் ஸ்ரீவிக்ஞான நிதி தீர்த்தர் ஆவார் . இவர் பொறுப்பேற்ற பின்னரே நவபிருந்தாவனத்தில் அன்றாட பூஜைகள் துவங்கப்பட்டு சிறப்புற நடைபெறுகிறது.ஸ்ரீ விக்ஞான தீர்த்த சுவாமிகள் 95வது வயதில் கர்நாடக மாநிலம்முளுபாகலில் உள்ள நரசிம்ம தீர்த்ததில் பிருந்தாவனஸ்தராகி (ஜீவசமாதி) விட்டார்.
திருவாளர் நவ பிருந்தாவனம் பழனிச்சாமி 9750265865 பல ஆண்டுகாலமாக பலருக்கு தெரியாமல் இருந்த இந்த அரிய பிருந்தாவனத்தை 25 வருடமாக பல ஆன்மீகப்பணிகள் செய்து அனைத்து மக்களுக்கும் இந்த நவ பிருந்தாவனத்தின் பெருமைகளை பலருக்கும் நோட்டீஷ்கள் துண்டு பிரசுரங்களால் பல மக்களை இந்த பிருந்தாவனத்தின் பெருமைகளை கொண்டுசென்றவர் . இந்த அரிய பதிவை உருவாக்க பல குறிப்புகள் அளித்த அவர்க்கு நம் மனமுவந்த பாராட்டுகள். மேலும் அழகிய பிருந்தாவனத்தை பற்றிய தகவல்களுக்கு மேற்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
முடிவுரை:
அழகிய அமைதியான அரிய சந்நியாசி மடம் என்னும் நவபிருந்தாவனத்தை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் , பல பக்தி மலர்களில் பல கட்டுரைகள் இந்த பிருந்தாவனத்தை ஆன்மீகப் புகழ் சேர்க்கின்றன . இங்கு வருகிற பக்தர் தியானம் செய்ய ஏற்ற அமைதிச்சூழல் நிலவுகிறது . பல பக்தர்கள் தீர்த்தர்கள் முன் அமர்ந்து தியானிக்கும் போது புதிய அனுபவங்கள் பலன் பெற்றதாக வரலாறு. ஒரு முறை சென்றால் மறுபடியும் செல்லத்தூண்டுகிற அற்புத ஜீவசமாதியாகும், பசு நெய் தீபங்களுடன் செல்லுங்கள் . இங்கு பிருந்தாவனத்தில் விளக்கேற்றி வழிபடுங்கள். மன அமைதியும் மகான்கள், ஜீவன் முக்தர்கள், சித்தர்களான இந்த அழகிய பிருந்தாவனத்தை அலங்கரிக்கின்ற தீர்த்தர்களின் அருள் பெறுங்கள். உங்கள் அனுபவங்களை பகிருங்கள் . மற்றபடி எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்க ஸ்ரீ நவபிருந்தாவன தீர்த்தங்கர்களை சித்தர்களை வேண்டி நிற்கிறேன்.