21 December 2013

3 12 21 30 ம் தேதி பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்

     இந்த எண்ணின் ஆதிக்கக் கோள் குரு ஆகும். குரு மிகவும் வலிமை வாய்ந்த கோளாகக் கருதப் படுகிறது.
     


    இவர்களில் பெரும் பாலோர் நடுத்தர உயரம் உடையவர்கள். வட்ட முகமும், அழகான கண்களையும் உடையவர்கள். நிமிர்ந்த நடையும், கம்பீரமான தோற்றமும் உடையவர்கள். இயல்பாகவே அடக்கம், பொறுமை, பெரியவர்களுக்குக் கீழ்படிதல் போன்ற குணங்கள் அமையப் பெற்றவர்கள். நாணயத்தையும், கௌரவத்தையும், நல்ல பெயரையும் உயிராகக் கருதக் கூடியவர்கள். இந்த எண்ணைப் பெற்று பிறந்தவர்கள் காரியத்தில் கண்ணும், கருத்துமாக இருப்பார்கள். வேலையில் கண்டிப்பு உள்ளவர்களாகவும், எந்த காரியமானாலும் அதை சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்கள். கையில் பணம் இருந்தால் முன் பின் யோசிக்காமல் செலவு செய்து விட்டு பின் தேவைப் படும் போது கடன் வாங்கவும் தயங்க மாட்டார்கள். அதிக கூர்மையான அறிவும், உழைப்பும் இயற்கையாகவே அமையப் பெற்றவர்கள் ஆதலால் சிறு வயதிலேயே புத்திசாலி என்று எல்லோராலும் பாராட்டப் பெறுவார்கள். சிறு வயது முதலே பொறுப்பை உணர்ந்து போற்றும் படியாக நடந்து கொள்ளுவார்கள். பேச்சில் கண்ணியமும், அதே வேளையில் கண்டிப்பும் இருக்கும். நல்ல செயல்களும், பழக்கமும் உடையவர்கள். பிறருக்கு உதவும் மனம் கொண்டவர்கள். ஆனால் இவர்கள் பிறரிடம் உதவி கேட்க மாட்டார்கள். இவர்கள் கடினமான உழைப்பாளிகள். கல் மனம் போன்று தோன்றினாலும் உண்மையிலேயே மென்மையான உள்ளம் கொண்டவர்கள். எந்த ஒரு செயலையும் நியாயமான முறையிலேயே செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அதிக இறை நம்பிக்கை உடையவர்கள்.தம் வேலைகளை விட மற்றவர்களின் வேலைகளை செய்வதில் அதிக அக்கறை உடையவர்கள். எனவே பொது காரியங்களில் இவர்களை அதிகம் காணலாம். அளவுக்கு மிஞ்சிய ஆசை கொள்ள மாட்டார்கள். எந்த நிலையில் இருந்தாலும் உண்மையுடனும், திருப்தியுடனும் செயலாற்று வார்கள். தன்னம்பிக்கை உடையவர்கள். பணத்துக்காக எந்த ஒரு வேலையையும் செய்ய மாட்டார்கள். பொதுவாக இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு காதல் உணர்வு அதிகம் இருக்கும். ஆனால் இவர்களில் பெரும் பாலோர் காதலில் தோல்வியையே அடைவார்கள். ஆனாலும் இல் வாழ்க்கை சிறப்பாகவே அமையும். இவர்களுக்கு தோல் தொடர்பான நோய்கள் ஏற்படும். நரம்பு தொடர்பான நோய்கள், வாத தொடர்பான நோய்கள் இவர்களை துன்பப் படுத்தும். உடற் பயிற்சியின் மூலமும், குறிப்பிட்ட நேரத்தில் உணவருந்தும் பழக்கமும் அமைத்துக் கொண்டால் ஓரளவு நோய்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். இவர்கள் வழக்கறிஞர்களாகவும், நீதிபதிகளாகவும், பேராசியர்களாகவும், வங்கியில் பணி புரிபவர்களாகவும் இருக்கலாம்.